1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (10:18 IST)

’ஜெயலலிதா அரசு கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்கு முயன்றுள்ளது’ - ம.ந.கூ கண்டனம்

’ஜெயலலிதா அரசு கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்கு முயன்றுள்ளது’ - ம.ந.கூ கண்டனம்

ஜெயலலிதா அரசு பல்கலைக் கழக துணைவேந்தர் பணி நியமனத்தில் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்கு முயன்றுள்ளது என்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்குள் ஆளுங்கட்சியினரின் நெருக்கடிக்குப் பணிந்து துணைவேந்தர் பணி நியமனம் செய்யக் கூடாது என்றும் மக்கள் நலக் கூட்டணி தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து மக்கள் நலக் கூட்டணியினர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளையும் பாழ்படுத்திய அதிமுக அரசு, கல்வித் துறையையும் சீரழித்துவிட்டது. கல்லூரிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பணி நியமனங்களைப் போலவே, பல்கலைக் கழக துணைவேந்தர் தேர்விலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
 
பல்கலைக்கழக மானியக்குழு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி துணைவேந்தர் தேர்வுக் குழுவில் பல்கலைக்கழக வேந்தரின் அதாவது ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி, சிண்டிகேட் - கல்விக்குழு உள்ளிட்ட பல்கலைக் கழக அமைப்புகளின் பிரதிநிதி ஆகிய மூவர் இடம்பெற வேண்டும்.
 
இந்தக் குழுவினர் பரிந்துரையின் படி, கல்வித்துறையில் சிறந்து விளங்குபவர்களும், பத்து ஆண்டுகள் பேராசிரியர்களாகப் பணியாற்றிவர்களும்தான் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்.இந்தத் தேர்வுக் குழு துணைவேந்தர் பதவிக்கு மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட பட்டியலைப் பரிந்துரை செய்யும். இதிலிருந்து ஒருவரை பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும்.
 
இதுதான் யு.ஜி.சி. நடைமுறையாகும்.கடந்த திமுக ஆட்சியிலும், தற்போது அதிமுக ஆட்சியிலும் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஆளுங்கட்சியினரின் பரிந்துரையின்படி தகுதியற்றவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவதும், கோடிக்கணக்கில் பணம் கை மாறுவதும், சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.
 
உயர் கல்வித்துறையை நாசமாக்கும் இத்தகைய ஊழல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், கல்வியாளர் மு.அனந்தகிருஷ்ணன் துணைவேந்தர் நியமனங்களில் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து பிப்ரவரி 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
 
இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக் கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் ஆகிய மூன்றிலும் துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஜெயலலிதா அரசு வேகம் காட்டி வருகிறது.
 
மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் மூலம் பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறைகளை மீறி, தகுதியற்றவர்களை பட்டியலில் சேர்த்து, அதிலிருந்து தங்களுக்கு வேண்டியவர்களை பணியில் நியமனம் செய்ய ஜெயலலிதா அரசால் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
 
துணைவேந்தர் நியமனங்களில் நடைபெறும் ஊழல் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், ஜெயலலிதா அரசு மேற்கண்ட மூன்று பல்கலைக் கழகங்களுக்கும் அவசர அவசரமாக துணைவேந்தர்களை நியமிக்கத் துடிப்பது மூலம் ஜெயலலிதா அரசு துணைவேந்தர் பணி நியமனத்தில் ஊழல்கள் நடத்த இருப்பதை அம்பலப்படுத்துகிறது.
 
பல்கலைக் கழக துணைவேந்தர் பணி நியமனத்தில் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்கு முயன்றுள்ள ஜெயலலிதா அரசுக்கு மக்கள் நலக் கூட்டணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்குள் ஆளுங்கட்சியினரின் நெருக்கடிக்குப் பணிந்து துணைவேந்தர் பணி நியமனம் செய்யக் கூடாது என்று தமிழக ஆளுநரைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.