1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (12:47 IST)

ஜூனியர் விகடன் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், ஜூனியர் விகடன் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
 
அவரது மனுவில் கூறியிருப்பதாவது:
 
ஜெயலலிதா, 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். இவருக்குத் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய செல்வாக்கும் நற்பெயரும் உள்ளது.
 
இந்த நிலையில், வாரம் இருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன் பத்திரிகையின் செப்டம்பர் 17ஆம் தேதியிட்ட இதழில், ‘முன்கூட்டியே ராஜினாமா?’ என்ற தலைப்பில் அவதூறு மற்றும் ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஆதாரமற்ற செய்தியினால், முதல்வருக்குச் சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
 
எனவே, அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரான பி.திருமாவேலன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.