1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2015 (17:30 IST)

கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் அழைப்பிதழ் கூட கொடுக்கவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

மெட்ரோ ரயில் திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கோ, மு.க.ஸ்டாலினுக்கோ ஒரு அழைப்பிதழ் கூட கொடுக்கப்படவில்லை என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
கூடுவாஞ்சேரியை அடுத்த பாண்டூர் கிராமத்தில் ரூ.30லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. அதில், கனிமொழி எம்.பி. சமுதாய கூடத்தை திறந்து வைத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
அப்போது பேசிய அவர், ”அதிமுக அரசு எந்த நலத்திட்டத்தையும், மக்கள் பணிகளையும் சரியாக செய்வதில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதற்கும், அதை தடுப்பதற்கும் தான் அதிமுக அரசு நோக்கமாக இருக்கிறது.
 
காசுக்காக ஆசைப்பட்டு ஓட்டு போடுவதினால் எவ்வளவு இழந்து உள்ளோம் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே இனி வரும் சட்டசபை தேர்தலில் அதை தவிர்த்து மக்கள் சிந்தித்து ஓட்டு போட வேண்டும்.
 
திமுக ஆட்சியில் கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டப்பணியை ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் இருந்து கொண்டே ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்துள்ளார். இந்த திட்டத்தை கொண்டு வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கோ, மு.க.ஸ்டாலினுக்கோ ஒரு அழைப்பிதழ் கூட கொடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.