வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (19:20 IST)

ஜெயலலிதா மரணம்: அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர்.
 
இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி விசாரணை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களையும், புகாருக்கு உள்ளானவர்களையும் விசாரித்து வருகின்றார்.
 
இந்த விசாரணை தினமும் நடந்து வருகிறது. அதன்படி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆணையத்திடம் தாக்கல் செய்ய நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.
 
ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்துக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுத முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. வரும் 12-ஆம் தேதிக்குள் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.