1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: புதன், 6 மே 2015 (19:09 IST)

ஜெயலலிதா தீர்ப்பை எதிர்நோக்கி பெங்கரூரு நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதால், அதிமுகவினர் பெங்களூரை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
 

 
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
 
இதில் கடந்த மார்ச் 11 ஆம் தேதியுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. இதனையடுத்து, நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
 
இந்த வழக்கில், அரசு சார்பில் பவானி சிங் ஆஜரானது செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஆச்சர்யா ஆகியோரின் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், நீதிபதி குமாரசாமி விரைவில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியானது.
 
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மே 11 ஆம் தேதி வெளியாகும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமூக வலைத்தளமான ட்விட்டரில் அரசியல் தீயை கொழுத்திப்போட்டார்.
 
இதனையடுத்து, இந்த வழக்கு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள தமிழக பத்திரிக்கைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
 
இவர்களை எல்லாம் ஓரம் கட்டும் வகையில், தமிழகத்தில் உள்ள அதிமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும், நிர்வாகிகளும் பெங்களூர் நோக்கி கார் மூலம் வரிசையாக படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
 
இதனால், பெங்களூரூவில் உள்ள முக்கிய ஹோட்டல்களில் எல்லாம் அறைகள் எல்லம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண ஹோட்டல்களை கூட அதிமுகவினர் விட்டுவைக்கவில்லையாம். அனைத்து ஹோட்டல்களில் உள்ள பெரும்பாலான அறைகளையும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
 
கோடை விடுமுறையில் பொது மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பெங்களூரூவின் அழகை ரசிக்க சென்னை மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து  செல்வது வாடிக்கை. ஆனால்,  இம்முறை,  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கு விசாரணை காரணமாக பெரும்பாலன ஹோட்டல்களை அதிமுகவினர் புக் செய்துவிட்டதால், ஏமாற்றத்துடன்  பெங்களுரை வீட்டு வெளியேறி வருகின்றனர்.
 
தமிழகம், கர்நாடகா எல்லைப் பகுதியான ஓசூரில் கூட தங்கும் அறைகள் கிடைக்கவில்லையம்.
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாகும் பட்சத்தில் பெங்களூரூல் இருந்தே  தமிழகம் வரை வெற்றிப் பேரணியாக வர அதிமுகவினர் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
 
இந்த தகவல் திமுக உள்ளிட்ட கட்சிகளின் காதுகளுக்கு எட்டவே, அவர்களில் சிலர் பதறிடியத்துக் கொண்டு பெங்களூருவுக்கு சென்றுள்ளதாக தகவல்.
 
ஆக மொத்தம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு பரபரப்பு இப்போது முதலே பற்றிக் கொண்டுள்ளது.