செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (18:35 IST)

ஜெயலலிதா இனி தமிழகத்திற்கு முதல்வராக முடியாது: மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா இனி தமிழகத்திற்கு முதலமைச்சராக முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
 
விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, ''இந்தியாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போன மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது உத்தரபிரதேசம். அடுத்ததுதான் தமிழகம். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் கூட 144 தடை உத்தரவு போடப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் போடப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் தற்போது ஜெயலலிதா நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
அவருக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது முதல்வராகியுள்ளார். ஆனால் அவர் முதலமைச்சர் அறைக்கு சென்று பணியாற்றவில்லை. அவர் அறையின் வாயிலிலும் நிதி அமைச்சர் என்றுதான் உள்ளது. அப்படியானால், தமிழகத்துக்கு யார் முதலமைச்சர்?. தமிழகத்தில் ஒரு பொம்மை ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் அரசு நிர்வாகம் செயல்படவில்லை.
 
கடந்த திமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுவுக்கு கடன், வேலைவாய்ப்பு என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வங்கிக்கு சென்று கடன் கேட்டாலே மகளிர் வெளியேற்றப்படுகின்றனர். இந்த ஆட்சியில் முதியோர் உதவித்தொகையும் வழங்கப்படவில்லை. இப்படி அதிமுக ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளை சொல்ல முடியாது.
 
தமிழ்நாட்டில் இனி ஜெயலலிதா முதலமைச்சராக வர முடியாது. இது மக்கள் மன்றம் விதித்த தீர்ப்பு அல்ல. நீதிமன்றம் விதித்த தீர்ப்பு.
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் கருணாநிதி முதல்வர் ஆவது உறுதி. இதை, திமுக பதவியில் அமர வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இந்த ஆட்சியில் தமிழக மக்கள் இன்னல்களில் சிக்கி தவிக்கிறார்கள். அதில் இருந்து காப்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன். 2016ல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைக்க ஒவ்வொரு தொண்டனும் சபதம் ஏற்போம்" என்றார்.