வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (12:19 IST)

தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கு 125 கோடியில் அடிப்படை வசதிகள்

தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கு பாதாள சாக்கடை, சாலை வசதி, பேருந்து நிலையம், தெரு விளக்கு, பூங்கா உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ரூ.125 கோடியில் ஏற்படுத்திடத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மக்கள்தொகை பெருக்கம், வளர்ந்து வரும் வணிகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக எனது தலைமையிலான அரசு சென்ற ஆண்டு தரம் உயர்த்தியது. 
 
இது மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 61 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர்த் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், தெரு விளக்குகள் என 454 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இதே போன்று, திண்டுக்கல் மக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில், 29 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர்த் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், தெருவிளக்குகள் என 119 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஐர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தைப் புனரமைக்கவும், திண்டுக்கல் மாநகர் மற்றும் காமராஜர் சாகர் திட்டத்தில் உள்ள வழியோர கிராமங்களுக்குத் தேவைப்படும் 26 எம்.எல்.டி குடிநீரைப் பெறவும் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும். 
 
இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை 82 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தித் தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 
 
1. தஞ்சாவூர் பகுதி மக்களுக்குச் சீரான மற்றும் போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 45 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். 
 
2. பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர்ப் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். 
 
3. தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும் பொலிவையும், தூய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 
 
4. பாதசாரிகள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல ஏதுவாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும். 
 
5. தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதிலும் சீரான மற்றும் தரமான ஒளியை வழங்கும் நோக்கில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படும். 
 
6. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க, 4 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும். 
 
இதே போன்று, திண்டுக்கல் மாநகராட்சி மக்களுக்கும் 42 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ்க்காணும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, 
 
1. பொதுமக்களும், நகரங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் சாலைகளையும், சுற்றுலா இடங்களையும் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் தெருக்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஒளிரும் வழிகாட்டிப் பலகைகள் மற்றும் குறியீடுகள் அமைக்கப்படும். 
 
2. மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். 
 
3. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கென 5 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும். 
 
4. திண்டுக்கல் மாநகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பேருந்து நிறுத்துமிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தி, உணவகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 
5. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலைகளை அமைத்துத் தரவும், மேம்படுத்திடவும் ஏதுவாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 65 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். 
 
6. சாலைகளில் மழை நீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 
 
7. திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுத்து, சுகாதாரமான சுற்றுச்சுழலை உருவாக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் அமைக்கப்படும். 
 
இந்த நடவடிக்கைகள் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி எழில்மிகு மாநகராட்சிகளாக உருவாக வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.