வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வியாழன், 31 ஜூலை 2014 (17:05 IST)

தமிழ்நாட்டில் 64 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்

தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் நோக்குடன், நடப்பு நிதி ஆண்டில் 60 துணை மின் நிலையங்கள் அமைக்கவும் சென்னையில் தனியே இரண்டு 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்திடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஜூலை 31 அன்று, ஜெயலலிதா அறிவித்ததாவது:
 
நுகர்வோருக்குத் தடையற்ற தரமான மின்சாரம் வழங்கப்பட வேண்டுமென்றால், கூடுதல் மின் உற்பத்திக்கு ஏற்ப மின் தொடரமைப்பு மற்றும் பகிர்மானம் ஆகியவற்றின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். மூன்றாவது முறையாக எனது தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் 134 துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டன. 
 
தமிழ்நாட்டில் 60
 
இதன் தொடர்ச்சியாக, நடப்பு நிதி ஆண்டில் 60 துணை மின் நிலையங்கள் மற்றும் 2,500 சுற்று கிலோ மீட்டர் உயர் அழுத்த மின் வழித்தடப் பாதைகள் 5,284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 60 துணை மின் நிலையங்களில், மூன்று 400 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், ஒன்பது 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், முப்பத்தெட்டு 110 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், பத்து 33 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அடங்கும். 
 
சென்னையில் 2
 
இவை தவிர, சென்னை மாநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேலும் இரண்டு 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் 338 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவற்றில், மேற்கு மாம்பலத்தில் 92 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு துணை மின் நிலையமும், போரூரில் 245 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு துணை மின் நிலையமும் அமைக்கப்படும். 
 
கமுதியில் 1 + முத்துராமலிங்கபுரத்தில் 1
 
தமிழ்நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் சூரிய மின் சக்தியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சூரிய மின் சக்திக் கொள்கையை நான் 20.10.2012 அன்று வெளியிட்டேன். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 102 மெகாவாட் நிறுவுத் திறன் கொண்ட 49 சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 708 மெகாவாட் அளவிற்குச் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய தொழில் முனைவோருக்கு இசைவுக் கடிதங்களை வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டப்படும் 60,000 பசுமை வீடுகளுக்கு சூரிய மின் சக்தி வசதி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 20,000 தெரு விளக்குகள் சூரிய மின் சக்தி வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளன. 
 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமையகத்தில், மேற்கூரையில் அறுபது கிலோவாட் சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையத்தை 30.12.2013 அன்று நான் தொடங்கி வைத்தேன். வீட்டு மேற்கூரைகளில் சூரிய மின் சக்தி தயாரிக்கும் நிலையங்களை நிறுவுவதற்காக ஒரு கிலோவாட் சூரிய மின் சக்தி நிறுவுத் திறனுக்காக 20,000 ரூபாய் மானியத்தைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதுவரை 1708 வீடுகளுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சூரிய மின் சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மின் தொடரமைப்பில் சேர்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 400 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 435 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தில் 230 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 47 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்படும். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.