1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (15:37 IST)

திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களில் 3 புதிய தொழிற் பேட்டைகள்

தமிழகத்தில் 3 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2014 ஜூலை 24 அன்று அறிவித்தார். விதி 110இன் கீழ், அவரது அறிவிப்பு வருமாறு:
 
சிட்கோ நிறுவனம், அரசால் நிறுவப்பட்ட 35 தொழிற்பேட்டைகளையும்; சிட்கோவால் நிறுவப்பட்ட 62 தொழிற்பேட்டைகளையும் பராமரித்து வருகிறது. நடப்பாண்டில் மேலும் மூன்று தொழிற்பேட்டைகள் திண்டுக்கல் மாவட்டம் ஆர். கோம்பையில் 51.26 ஏக்கரிலும்; காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரையில் 43 ஏக்கரிலும்; மற்றும் கரூர் மாவட்டம் புஞ்சை காளக் குறிச்சியில் 54.27 ஏக்கரிலும் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மூன்று தொழிற்பேட்டைகளுடன் சேர்த்து சிட்கோ நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும். 
 
மேற்கண்ட 3 இடங்களில் 148.53 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள புதிய தொழிற் பேட்டைகளில் 23 கோடி ரூபாய் செலவில் தார்ச் சாலைகள்; தெரு விளக்குகள்; குடிநீர் வசதி; பொது வசதி மையம் போன்றவை ஏற்படுத்தப்படும். இந்தத் தொழிற்பேட்டைகளில் வாகன உதிரி பாகங்கள்; பொது பொறியியல் அலகுகள்; பின்னலாடை தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகள் என ஏறத்தாழ 345 தொழில் மனைகள் அமையப் பெற்று ஏறக்குறைய 10,000 பேர் வேலை வாய்ப்பினை பெறுவர். இந்தத் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான செலவினம் சிட்கோவின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். 
 
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக அதாவது, சிட்கோவின் மூலமாக, விழுப்புரம் மாவட்டம் காட்டு வன்னஞ்சூர்; தருமபுரி மாவட்டம் பர்வதனஹள்ளி; அரியலூர் மாவட்டம் மல்லூர்; மற்றும் நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடி ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 4 தொழிற் பேட்டைகளில் 13 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை; மழைநீர் கால்வாய்; சிறு பாலம்; தெரு விளக்கு போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.