1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2016 (14:36 IST)

ஜெயலலிதாவும், தோழி சசிகலாவும் செய்த செயல்கள் மறக்க முடியாதது - கருணாநிதி

கும்பகோணம் மகாமகத்தில் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் செய்த செயல்கள், அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் ஆகியவையும் மறக்க முடியாத சம்பவங்களாக உள்ளன என்று கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில்,செம்பரம்பாக்கம் நீர் திறப்பு, வெள்ள பேரிழப்பு, உயிரிழப்பு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.
 
நிவாரண உதவிகள் அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி முறையாகப் போய்ச் சேருவதை உறுதி செய்ய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அவர்கள் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும்.
 
அடையாற்று கரையோர மக்களை சென்னைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே மறு குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கருணாநிதி, ”தமிழகத்தில் அண்ணாவின் பெயரைக் கொண்டுள்ள அதிமுக அரசு நடைபெற்ற காலகட்டங்களில் எல்லாம் பல்வேறு தீமைகளே நடைபெற்று வந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளும் அப்படித்தான் உள்ளன.
 
இதற்கு யார் காரணம், வெள்ள பாதிப்புகளை தடுக்காதது ஏன் என்பன போன்ற கேள்விகளுக்கு அதிமுக அரசு இன்னும் பதில் சொல்லவே இல்லை. பெருமழை குறித்து முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அதை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.
 
இதற்கு முன்னர் அதிமுக ஆட்சியில்தான் கும்பகோணம் மகாமகத்தில் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் குளிக்க சென்ற போது அவர்கள் செய்த செயல்கள், அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் ஆகியவையும் மறக்க முடியாத சம்பவங்களாக உள்ளன.
 
ஆட்சியில் இருப்பவர்கள் பொறுப்புக்கு வந்ததும் மக்களை காக்கும் எண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். யார் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருக்க கூடாது.
 
இது பெரியார், அண்ணா பிறந்த மண்ணாகும். செம்பரம்பாக்கம் ஏரி திறப்புக்கு வேறு யாரும் காரணம் அல்ல. நாங்கள் தான் காரணம் என்று சொல்லாமல் சொல்லி வரும் அந்த கூட்டத்துக்கு சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்” என்று கூறியுள்ளார்.