1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (11:24 IST)

தீபாவுக்கு அறிவுரைகள் வழங்கிய ஜெயலலிதா: அவர் அத்தை அல்ல அம்மா!

தீபாவுக்கு அறிவுரைகள் வழங்கிய ஜெயலலிதா: அவர் அத்தை அல்ல அம்மா!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 1 மாத காலமாக சிகிச்சை பெற்று வரும் அவரை, அவரது அண்ணன் மகளான தீபா சந்திக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.


 
 
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சசிகலாவின் உறவினர்களுக்கு அப்பல்லோவில் அனுமதி வழங்கப்படுகிறது. அனால் ஜெயலலிதாவின் இரத்த சொந்தமான தீபாவிற்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த தீபா, தனது அத்தை ஜெயலலிதா குறித்தான பசுமையான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அதில் ஜெயலலிதா ஒரு அத்தையை போல் இல்லாமல் தனது அம்மாவை போல் அறிவுரைகள் வழங்கியதாக கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியது, என்னுடைய அப்பா ஜெயக்குமார் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர் என் அத்தை. நான் பிறந்ததே கார்டனில் தான். எனக்குப் பெயர் வைத்ததும் அத்தைதான்னு அப்பாவும் அம்மாவும் என்னிடம் சொல்லியிருக்காங்க.
 
எனக்கு விபரம் தெரிந்த வயதில் அத்தையே என்னிடம், உனக்குப் பெயர் வைத்தது நான்தாண்டா என சொன்னபோது ஏற்பட்ட உணர்வு இருக்கே, அவ்வளவு நெகிழ்ச்சியானது அது.  நாங்கள் ராயப்பேட்டை வீட்டுக்கு வந்த பிறகும், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எங்களை கார்டனுக்கு அழைத்து, பேசி சிரித்து மகிழ்ந்திருப்பார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கணும்னு அடிக்கடி என் அப்பாவுக்கு அறிவுறுத்துவார்.
 
மேலும், ஒரு தாய் தன் குழந்தைக்கு எதையெல்லாம் சொல்லி வளர்ப்பாரோ அதுபோல என்னிடம் நேர்மையாக இரு, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ், உண்மையைச் சொல்வதில் தயங்காதே, ஜெயிப்பதற்காக கடுமையாக உழை, தைரியத்தை வளர்த்துக்கொள், பிடிக்காத விசயங்களில் சமரசம் செய்துகொள்ளாதே என நிறைய அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறார். அந்த வகையில், எனக்கு அவர் அத்தை அல்ல அம்மா என கூறி நெகிழ்ந்தார் தீபா.