வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (14:37 IST)

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு - விசாரணையை 6 வாரம் ஒத்திவைக்க கோரி கர்நாடக அரசு கடிதம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையை 6 வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
 

 
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
 
இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீனில் பெற்று வெளியே வந்தார். 
 
இதைத் தொடர்ந்து, தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்தார். 
  
இந்த மனு மீதான விசாரணை முடிவில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். கீழ்நீதிமன்ற தீர்ப்பை நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்தார். மேலும், அபராத தொகையையும் ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.
 
பின்னர், 4 பேரின் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இதே போல் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
வருகிற 12ஆம் தேதி மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 6 வார கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.