வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 7 ஜூலை 2014 (15:11 IST)

தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் கருணாநிதி - ஜெயலலிதா

திமுக தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, “அரைவேக்காடு யார்?” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது” என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் கருணாநிதி என தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 
அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, நதிநீர்ப் பிரச்சனை குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்த நான், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் குறித்து 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2012 ஆம் ஆண்டு வரையிலான விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது? என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டியதோடு, மேற்படி நான்கு அணைகளும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற தமிழ்நாட்டின் உரிமை, அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டினேன்.

அரசியல் ஆதாயம் தேடும் வகையில், என்னுடைய பதில் அறிக்கையில் உள்ள உண்மை விவரங்களையும் படித்து புரியது கொள்ளாமல், தேசியப் பதிவேடுகளையும் படித்துப் பார்க்காமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து கருணாநிதி, ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையின் மூலம் தான் ஒரு குழப்பவாதி என்பதை படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.
 
அதோடு அல்லாமல், 1.7.2014 அன்று “கேள்வியும் நானே – பதிலும் நானே” என்ற பாணியில் வெளியிடப்பட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், “அதிமுக அரசு சார்பில் பத்து இடங்களில் ‘அம்மா’ மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறாரே” என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, “அடுத்த அறிவிப்பினை நீங்கள் பார்க்கவில்லையா? தமிழகத்தில் 100 இடங்களில் “அம்மா வெற்றிலை-பாக்கு கடை”களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம்” என்று வயிற்றெரிச்சலுடன் தனக்குத் தானே பதில் அளித்து இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இது போன்று தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, பதில்களை அளிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தமிழக மக்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.
 
அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்து, தன்னுடைய அரசியல் அறியாமையை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி. இதிலிருந்து “அரசியல் அரைவேக்காடு யார்?” என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரியது கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.