வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:39 IST)

ஜெயலலிதா “உலகம் பிறந்தது எனக்காக” என்பதை மறக்க வேண்டும் - விஜயகாந்த்

ஜெயலலிதா “உலகம் பிறந்தது எனக்காக” என்ற சுயநலம் இல்லாமல், உலகம் பிறந்தது ஏழை, எளிய மக்களுக்காக, அவர்களுக்காகத்தான் இந்த ஆட்சி அதிகாரம் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீர்த்தவாரியின் போது புனிதநீராடிய பக்தர்கள் நான்குபேர் கூட்டநெரிசலில் குளத்தில் மூழ்கி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்று வருகின்ற சிறப்பான தை அமாவாசை என்பதால் முதல்நாள் இரவிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் நீராடுவதற்காக குவிந்திருந்தனர். ஆனால் அவர்களின் பாதுகாப்பு குறித்து இந்த அரசு அக்கறை கொண்டதாக தெரியவில்லை.
 
ஏழை, எளிய மக்களை பணம் கொடுத்து அழைத்து வரும் அதிமுகவின் கூட்டத்திற்கு, ஆயிரக்கணக்கான காவல்துறையினரை பாதுகாப்புக்கு அனுப்பும் அதிமுக அரசு, முப்பது காவலர்களை மட்டுமே பாதுகாப்புக்கு அனுப்பியது கண்டிக்கத்தக்கதாகும். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கூட, இந்த கூட்ட நெரிசல்மிக்க விழா குறித்து கவலைப்படவில்லை என்பது தெளிவாக தெரியவருகிறது. 
 
கூட்டநெரிசலை கட்டுப்படுத்தி, வரிசையாக சென்று பக்தர்கள் நீராடுவதற்கோ, சுவாமி தரிசனம் செய்வதற்கோ, ஆபத்து காலங்களில் முதலுதவி செய்வதற்கான ஏற்பாடுகளோ எதுவும் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆயிரக்கணக்கில் கூடிய கூட்டத்திலேயே இதுபோன்ற உயிர்பலி என்றால், கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகத்தில் தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கின்ற லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவியப்போகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்ன செய்ய போகிறார்?
 
மகாமக விழாவிற்காக நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகள் மோசமாகவும், தரமில்லாமலும் செய்யப்படுவதாகவும், மகாமக விழாவிற்குரிய முன்னேற்பாடுகள் எதுவும் சரிவர செய்யப்படவில்லை என்றும், அதனால் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
 
கடந்த 1992இல் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரின் உடன் பிறவா சகோதரி சசிகலாவும், மகாமகம் குளத்தில் நீராட சென்ற காரணத்தினால், கூட்டநெரிசல் ஏற்பட்டு, 42பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மிகப்பெரிய சர்ச்சை அப்போது ஏற்பட்டது.
 
திருவண்ணமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே நான்குபேர் உயிரிழப்பு என்றால், கும்பகோணம் மகாமகத்தில் லட்சக்கணக்கில் கூடுகின்ற பக்தர்களின் நிலை என்னவாகுமோ? என்கின்ற அச்சத்தில் பக்தர்களும், பொதுமக்களும் உள்ளனர். 
 
செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டதுபோல் அல்லாமல், மகாமக விழாவிற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பழைய சோக வரலாறு மீண்டும் திரும்பக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில்தான் இதை கூறுகிறேன்.
 
மேலும் பொதுமக்களின் அச்சத்தை போக்கவேண்டிய பொறுப்பும், கடைமையும், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இருக்கிறது. எனவே அதிகாரிகளின்மீது பழியைப்போடாமல் முதலமைச்சர் என்ற முறையில் இதற்காவது முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 
 
“உலகம் பிறந்தது எனக்காக” என்ற சுயநலம் இல்லாமல், உலகம் பிறந்தது ஏழை, எளிய மக்களுக்காக, அவர்களுக்காகத்தான் இந்த ஆட்சி அதிகாரம் என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.