வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (12:20 IST)

விஜயபாஸ்கர், சரத்குமாருக்கு மீண்டும் சம்மன் : சுழற்றி அடிக்கும் வருமான வரித்துறை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் ஆகியோருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.


 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக பல புகார்கள் எழுந்ததால், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீடீர் சோதனை நடத்தினர்.  
 
அதன் பின் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளித்தனர். அப்போது சரத்குமாரிடம் பல கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர்.  


 

 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவரின் மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.எனவே, கடந்த 12ம் தேதி ராதிகாவும், சரத்குமாரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதேபோல், ராடன் மீடியா நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி 90 லட்சம் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியானது. 
.
இந்நிலையில், வருகிற 17ம் தேதி திங்கட் கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமாருக்கு வருமான வரித்துறையினர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.