வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (13:22 IST)

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது - தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டி

தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:-
 
தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. சரியாக செயல்படவில்லை என்பதால் 129 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டன. சில கிராமங்களில் மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்.
 
கிருஷ்ணகிரி எக்காளநத்தம் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 402 வாக்காளர்களில் யாரும் வாக்களிக்கவில்லை. அரியலூரில் தாலுவிடைச்சேரியில் உள்ள 935 வாக்காளர்களில் யாரும் வாக்களிக்கவில்லை. ஈரோடு மருதூருக்கு உட்பட்ட 811 வாக்காளர்களில் ஒருவர் மட்டும் வாக்களித்தார். அரக்கோணம் உறையூரில் 421 வாக்காளர்களில் 2 பேர் மட்டும் வாக்களித்தனர். திண்டுக்கல் காரியாம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியிலும் ஓட்டு போடுவதை வாக்காளர்கள் புறக்கணித்துவிட்டனர்.
 
இந்த இடங்களில் மறுவாக்குப்பதிவு நடக்காது. தேர்தல் கமிஷனின் பக்கம் தவறு ஏற்பட்டால்தான் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படும். தமிழகத்தில் தற்போது எடுத்துள்ள கணக்குப்படி பரவலாக 72.83 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இறுதியாக எடுக்கும் கணக்கின்படி இதில் மாற்றங்கள் வரும். தபால் ஓட்டுகளையும் இதில் இனிதான் சேர்க்க வேண்டும்.
 
அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99 சதவீத வாக்குகள் (2009 ஆம் ஆண்டு தேர்தலில் 72.75 சதவீதம்) பதிவாகியுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் கரூரில் அதிகபட்சமாக 81.46 சதவீதம் ஓட்டு பதிவாகியிருந்தது.
 
குறைந்தபட்சமாக தற்போது தென்சென்னையில் 57.86 ஓட்டுகள் பதிவாகியுள்ளன (கடந்த தேர்தலில் 62.68 சதவீதம்). கடந்த முறை குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 61.04 சதவீத வாக்குகள் பதிவாகின. பொதுவாக சட்டசபை தேர்தலில்தான் நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிக ஓட்டுப்பதிவு இருக்கும்.

ஓட்டு பதிவு அதிகரிக்க பல முயற்சிகளை எடுத்தோம். ஆனாலும் கடந்த முறை பதிவான அதே அளவில்தான் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து இனிதான் ஆராய வேண்டும். இந்த முறை ஒரு கோடியே 30 லட்சம் ஓட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டு இருந்தன. எனவே இந்தமுறை 80 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.
 
ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 63.98 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஐ.டி. நிறுவனங்கள் உட்பட 10 நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை என்பதால், அவற்றின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளோம். அங்கு பணியாற்றி கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை விடுவித்தோம்.
 
தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்படவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கடந்த 2 நாட்களில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.70 லட்சம் கைப்பற்றப்பட்டது. அதில் 80 சதவீதம் பணம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு உரியது.
 
விஜயகாந்த் ஓட்டு போடும்போது, வாக்குப்பதிவு அரங்குக்கு அவரது மனைவியும் வந்து உதவி செய்ததாக கூறுகிறீர்கள். அதற்கான வீடியோவை நான் பார்க்க வேண்டும். அதன் பின்னரே அதுபற்றி கருத்து கூறமுடியும். அது உண்மை என்றால் அது ரகசிய காப்பு விதி மீறலாக அமையும்.
 
ஏதாவது வாக்குச்சாவடியில் 90 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்திருந்தால், அதையே காரணம் வைத்து மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோ படங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு செய்து, மறுவாக்குப்பதிவு பற்றி பின்னர் முடிவு செய்வார். மறுவாக்குப் பதிவு இருக்கும் இடங்களில் மட்டும் பறக்கும்படை இருக்கும்.
 
144 தடை உத்தரவு மிகுந்த பிரயோஜனமாக இருந்தது. கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாராட்டினார்கள். வீட்டுக்கு வீடு பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் இதற்கான அனுமதியை அளித்தது. கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நன்றாக பணியாற்றினார்கள்.
 
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதுதான் சவாலாக இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அதை வெளிப்படையாக கொடுப்பதை தடுத்துவிட்டோம். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. இன்னும் 2, 3 தேர்தலுக்குள் பணப்பட்டுவாடா இல்லாமல் போய்விடும்.
 
இதுவரை பணமாக ரூ.25.56 கோடியும், ரூ.27.74 கோடி மதிப்புள்ள பொருட்களையும் கைப்பற்றி இருக்கிறோம். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மது வகைகளும் பிடிபட்டுள்ளன.
 
பொள்ளாச்சியில் வாக்காளர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும், ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்று அ.தி.மு.க.வினர் கூறியதாகவும் புகார்கள் வந்தன. இந்தப் புகார்களையெல்லாம் விசாரித்து தீர்வு செய்வதற்காக, அங்குள்ள மண்டல குழுவுக்கு அனுப்பப்பட்டது.
 
மற்றொரு புகாரில், வாக்குச்சாவடிக்குள் வேட்பாளரின் வாகனத்தை விடவில்லை என்று கூறினர். ஆனால் 100 மீட்டர் தூரத்துக்குள் மாற்றுத் திறனாளிகள் வாகனங்களைத் தவிர மற்றவர்களின் வாகனங்களை சட்டப்படி அனுமதிக்க முடியாது.
 
அழியாத மையை விரலில் வைப்பதற்கு முன்பு, விரலை துணியால் துடைக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் துடைக்கவில்லை என்று புகார்கள் வந்தன. அதுகுறித்த அறிவுரைகளை உடனே வழங்கினோம்.
 
தமிழகத்தின் எந்த இடத்திலும் வன்முறை எதுவும் நடக்கவில்லை. புகார்கள் வந்ததும் அவற்றை உடனுக்குடன் தீர்த்துவிட்டோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.