1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 29 மே 2015 (02:37 IST)

பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்து வருகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்து வருவது குறித்து, உயர் நிலைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது. 2014-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் செமஸ்டர் தேர்வெழுதிய பொறியியல் மாணவர்களில் 47 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிய வருகிறது. 
 
205-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 40 சதவிகிதத்திற்கும் கீழாகவும், 58 கல்லூரிகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவுமே மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் விதிமுறைகளுக்கு மாறாக ஆசிரியர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. 
 
இந்நிலையில் துணை வேந்தர்களை நியமிப்பதில் மட்டும் முனைப்பு காட்டும் அ.தி.மு.க. அரசு பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் கல்வியின் தரத்தை மேம்படுத்த துளி கூட அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. 
 
பொறியியல் கல்வி என்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்பதையும், வேலைவாய்ப்பு என்பது அவர்கள் பெறும் கல்வித்தரத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதையும் அதிமுக அரசு உணர வேண்டும்.
 
எனவே, ஐ.ஐ.டி. வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை உடனே அரசு அமைத்து, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது பற்றி தீர விசாரிக்க வேண்டும் . பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த தேவையான ஆலோசனைகளை அக்குழுவிடமிருந்து பெற்று, அவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.