1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2016 (23:41 IST)

ராம மோகன் ராவ் ’தலைமைச் செயலாளரா?; பூதாகரமான செய்திகள் வரப்போகிறது - ஸ்டாலின் எச்சரிக்கை

தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், அதில் ஏதோ பெரிய மர்மம் இருக்கிறது, பூதாகரமான செய்திகள் வரப்போகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்கள், “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சி.ஆர்.பி.எஃப். தலைமை செயலகத்திற்குள் வந்திருக்க முடியாது எனவும், தன்னோடு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் முன்னாள் தலைமை செயலாளர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறாரே?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “வருமானவரித் துறை என்பது மத்திய அரசின் கீழ் அமைந்திருந்தாலும் அதற்கென தனி அதிகாரம், தனிச் சட்டம் இருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஏற்கனவே பலமுறை மத்திய அரசு அதிகாரிகளின் வீடுகளில், அவர்களது அலுவலகங்களில் எல்லாம் கூட இதுபோன்ற சோதனைகள் நடந்திருக்கின்றது.

அதுமட்டுமல்ல, தகுந்த உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த சோதனைகள் நடந்திருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளும் கூறுகிறார்கள், மத்தியில் இருக்கும் அமைச்சர் பெருமக்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், ஆதாரம் இருந்த காரணத்தால்தான் தலைமை செயலகத்திலும் சோதனை நடந்ததாக செய்திகள் வருகிறது.

அதைவிட முக்கியமாக, இப்போதும் நான் தான் தலைமை செயலாளர் என்று அவரது பேட்டியில் கூறியிருப்பதாக கேள்விப்பட்டேன். ஏற்கனவே சோதனை நடந்துக் கொண்டிருந்தபோதே நான் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தேன்.

தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், அதில் ஏதோ பெரிய மர்மம் இருக்கிறது, பூதாகரமான செய்திகள் வரப்போகிறது. எனவே, இதுகுறித்து முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்று அப்போதே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

இப்போதும் நான் சொல்கிறேன், நான் தான் தலைமை செயலாளர் என்று பேட்டி அளிக்கும் அளவிற்கு முன்னாள் தலைமை செயலாளர் இருக்கிறார் என்று சொன்னால், இதற்கு முதல்வர் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.