1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2016 (15:18 IST)

இதற்குத்தான் இவ்வளவு உதாரா? - ’கபாலி’யை சீண்டும் அருணன்

மீண்டும் ஒரு தாதா படம்தானா? இதற்குத்தான் இவ்வளவு உதாரா? என்று கபாலி திரைப்படம் குறித்து பேராசிரியர் அருணன் விமர்சித்துள்ளார்.
 

 
லிங்கா படத்தையடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் கபாலி. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
 
ரஜினிகாந்துடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன.
 
கபாலி படத்தின் டீசர் சென்னையில் மே 1 அன்று வெளியானது. காலை 11 மணிக்கு வெளியிட்ட டீசர், 24 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்தது சாதனையாகக் கருதப்பட்டது. இதுவரை மட்டும் 2 கோடியே 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
 
இந்நிலையில், பேராசிரியர் அருணன் கபாலி திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்:
 
“இதுவொரு ரவுடி கதைதான். ‘தளபதி’ மற்றும் ‘நாயகன்’ இரண்டுமே கலந்த சுந்தரக் கலவைதான் கபாலி” என்று கூறியிருக்கிறார் அதன் தயாரிப்பாளர் தாணு. (தமிழ் இந்து) மீண்டும் ஒரு தாதா படம் தானா? இதற்குத்தான் இவ்வளவு உதாரா?
 
ரஜினியின் அபாரமான நடிப்பாற்றலை பயன்படுத்தி ஒரு நல்ல சமூகப்படம் எடுக்க மாட்டார்களோ? அத்தனை கோடி ரூபாய் பணமும் ஒரு ரவுடி கதைக்குத்தானா? காலக் கொடுமை!