வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (08:28 IST)

3 பேரை ஏமாற்றி மோசடி செய்து 4 ஆவது திருமணம் செய்ய முயன்ற பெண்

இணையதளம் மூலம் 3 இளைஞர்களை திருமணம் செய்து, மோசடி செய்து, 4 ஆவது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை பி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கட்டட ஒப்பந்தக்காரர் சீனிவாசன். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புதன்கிழமை ஒரு புகார் அளித்தார்.
 
அந்த மனுவில், கோயம்புத்தூரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014 நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. 
 
விசாரணையில் அவர், ஏற்கெனவே 2 பேரை திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டு, பின்னர் என்னை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.
 
இப்போது 4 ஆவதாக இன்னொரு இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்து வருகிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காயத்ரியை கைது செய்து விசாரணை நடத்தினர். 
 
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியிருப்பதாவது:-
 
கோயம்புத்தூரில் ஒரு விடுதியில் தங்கி, மேட்ரிமோனி இணையதளத்தில் தனது பெயரையும், புகைப்படத்தையும் பதிவு செய்து, அதில் 30 வயது மேல் இருக்கும் இளைஞர்களை குறி வைத்து, அவர்களிடம் பேசி, தான் அனாதை என்று கூறி ஏமாற்றி, திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.
 
திருமணத்துக்குப் பின்னர், கணவருடன் சுமார் ஒரு மாதம் வாழ்க்கை நடத்திவிட்டு, அவர்களிடமிருக்கும் பணம், நகைகளை ஏமாற்றி பறித்துக் கொண்டு தப்பிவிடுவதும் தெரியவந்தது.
 
இவ்வாறு அவர் சென்னையைச் சேர்ந்த நரசிம்மன், திருச்சியைச் சேர்ந்த வெங்கடேசன், சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
 
யாரிடமும் சிக்காமல் இருப்பதற்கு காயத்ரி, சுந்தரவல்லி, இந்து, சுபிட்சா என பல பெயர்களுடன் அந்தப் பெண் வலம் வந்துள்ளார். இப்போது அம்பத்தூரைச் சேந்த ஓர் இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்றதும் காவல்துறையினருக்குத் தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்தப் பெண் மீது காவல்துறையினர் மோசடி வழக்குப் பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.