வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (15:04 IST)

கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தாலியை தெருவில் அறுத்தெரிந்த தந்தை

சேலத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் கழுத்திலிருந்த தாலியை அவருடைய தந்தை அறுத்தெறிந்தார்.
 
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (22). இவர் சேலத்தில் உள்ள தனியார் ஜவுளி கடையில் பணிபுரிந்து வருகிறார். அதே கடையில், கருப்பூரை அடுத்த பரவைக்காடு பகுதியை சேர்ந்த திவ்யா (23) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.
 
கடந்த 2 ஆண்டுகளாக கோபிநாத்தும், திவ்யாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல், இருவரது பெற்றோர்களுக்கு, தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கோபிநாத்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனால், கடந்த மாதம் 23ஆம் தேதி, நண்பர்கள் உதவியுடன் சேலம் ஊத்துமலையில் உள்ள முருகன் கோயிலில், கோபிநாத்தும், திவ்யாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது கோபிநாத்தின் தந்தைக்கு தெரியவர, அவரது தந்தை பழனிசாமி, கோபிநாத்தை வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று, கோபிநாத்தும், திவ்யாவும் வீட்டை விட்டு வெளியேறி ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடிவு செய்து, இருவரும் ஓமலூருக்கு வந்துள்ளனர். மகன் பதிவு திருமணம் செய்ய ஓமலூருக்கு வருவது பழனிசாமிக்கு தெரிய வந்துள்ளது.
 
உடனே பழனிச்சாமி ஓமலூர் கடைவீதிக்கு வந்த காதல்ஜோடியை வழிமறித்தார். அப்போது, திவ்யாவின் கழுத்தில் புது தாலி தொங்கியதை கண்டு ஆவேசமடைந்த பழனிச்சாமி, அதை பறித்து வீசினார். மேலும், திவ்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
 
இதனால் செய்வதறியாது அதிர்ச்சியடைந்த கோபிநாத், திவ்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயற்சி செய்துள்ளார். மேலும், கடை வீதிக்கு சென்ற கோபிநாத், புது தாலிக்கயிறு வாங்கி, அதே இடத்தில் மனைவியின் கழுத்தில் மீண்டும் கட்டினார்.
 
இதில் கடும் கோபமடைந்த பழனிச்சாமி அவர்களை விடாமல் பின்தொடர்ந்து துரத்தி வந்து, திவ்யாவின் கழுத்தில் மறுபடியும் தாலி இருந்ததை கண்டு, அதை அறுத்து எறிந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் காவல் துறையினர், உடனடியாக அங்கு விரைந்து சென்று, காதல் ஜோடியை மீட்டனர்.
 
பிறகு காவல் துறையினர் கோபிநாத்தையும், திவ்யாவையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவீட்டாரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என எழுத்துப்பூர்வ உறுதிமொழி வாங்கினர். பின்னர் திவ்யாவை, கோபிநாத்துடன் அனுப்பி வைத்தனர்.