வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (23:11 IST)

மதிமுகவுக்கு இமயம் ஜெபராஜ் முழுக்கு

மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து தான் விலகுவதாக இமயம் ஜெபராஜ் அறிவித்துள்ளார்.
 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு இமயம் ஜெபராஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
 
வணக்கத்திற்குரிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கட்சியில் இணைந்து முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் என்னால் இயன்ற பணியை செய்துள்ளேன்.
 
என் இனத்தின் மீதும் எனது தாய்மொழியின் மீதும் எனக்குள்ள பற்றின் காரணமாக நான் பிறந்த இந்த இனத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அதற்கு இந்த இயக்கம் துணை நிற்கும் என்று கருதித்தான் இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வந்தேன்.
 
ஆனால், இந்த இயக்கத்தில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு இயக்கத்தில் இணைந்த பிறகு நம்மால் அந்த இயக்கத்திற்கு எந்த அவப்பெயரும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே தொடர்ந்தேன்.
 
ஆனால் தொலைநோக்குப் பார்வை இன்றி, மிக அவசரகதியில் தாங்கள் முடிவு  எடுப்பதும், அதன்படி தொடர்ந்து செயல்படாமல் முங்குவதும், அடிக்கடி தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதும், அதற்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, இந்த இயக்கத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துள்ளதாக  உணர்கிறேன்.
 
எனவே, இந்த இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்ற என்னால் இயலாத சூழ்நிலை உள்ளது. அதனால், மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.
 
மதிமுகவில் இருந்து முன்னணி தலைவர்கள்  பலர் விலகிய நிலையில், இமயம் ஜெபராஜ் -ம் அக்கட்சிக்கு மழுக்கு போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.