வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 17 மார்ச் 2015 (14:46 IST)

கள்ளக்காதல், மோதல், கொலை: மதபோதகர், கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது

தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்து பின்பு வேறொருவரை மணக்க முயன்ற கல்லூரி மாணவரை கொலை செய்த மதபோதகர் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த அருளாளன் (25). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதுதவிர பகுதிநேர வேலையாக ஒரு தனியார் டியூசன் மையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பித்து வந்துள்ளார்.
 
மேலும், கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பகுதிநேர ஊழியராகவும் வேலை செய்துவந்துள்ளார். அதே சமயம் பாஸ்டர் பிராங்கிளின் பால் (37) என்பவர் கோபி மற்றும் கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மதபோதகராக பணியாற்றி வந்துள்ளார்.
 
இந்நிலையில், கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருளாளன் சென்று வந்தபோது அவருக்கும், பிராங்கிளின் பாலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அருளாளன் அடிக்கடி பிராங்கிளின்பால் வீட்டிற்கு சென்றுவந்தார். அப்போது அருளாளனுக்கும், பிராங்கிளின் பாலின் மனைவி கவுரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
 
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் பிராங்கிளின் பாலுக்கு தெரியவந்துள்ளது. இதனால் பிராங்கிளின் பாலுக்கும், கவுரிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கவுரி பிராங்கிளின் பாலை பிரிந்து கோவையில் வசித்து வருகிறார்.
 
இதற்கிடையில், அருளாளனுக்கும் கொங்கர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பிராங்கிளின் பாலுக்கு, தனது மனைவியிடம் உல்லாசமும் அனுபவித்துவிட்டு, வேறு பெண்ணை வேறொரு பெண்ணை காதலிப்பது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் அருளாளன் காதலித்து வந்த பெண்ணிற்கும், மதபோதகர் பிராங்கிளின் பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் பிராங்கிளின் பால் தன் மனைவியிடம் விவகாரத்து பெற்று, காதலியை திருமணம் செய்து கொள்ள எண்ணியுள்ளார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

ஆனால், இதற்கு அருளாளன் தடையாக இருப்பதாக அவர் எண்ணியுள்ளார். இதனால், அருளாளனை கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், அருளாளனின் ஆங்கில வகுப்பிற்கு வரும் மாணவர்களின் உதவியை பிராங்கிளின் பால் நாடியுள்ளார்.
 
இதற்கு மாணவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த 6ஆம் தேதி அருளாளன் ஆங்கில மொழி கற்பிக்க சென்றபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் விஷம் கலந்த குளிர்பானத்தை அவரிடம் கொடுத்தனர்.
 
குளிர்பானத்தை குடித்த சிறிதுநேரத்தில் அருளாளன் மயங்கி விழுந்துள்ளார். பின்னர், தேவாலய வேன் ஓட்டுநருடன் பிராங்கிளின் பால் சம்பவ இடத்துக்கு வேனில் சென்று, அருளாளனை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
 
பிறகு, அவரது உடலை தடப்பள்ளி வாய்க்காலில் வீசிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டன்ர்.
 
விசாரணைக்கு பிறகு அருளாளனை கொலை செய்த மதபோதகர் பிராங்கிளின்பால், வேன் டிரைவர் ஜான் மற்றும் 3 மாணவர்கள் என மொத்தம் 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவர்கள் 3 பேரும் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.