வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (05:16 IST)

புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள்: இயக்குநர் வ.கௌதமன்

புத்தாண்டு விழாவை நமது மக்கள் இந்த வருடம் மட்டும் புறக்கணிக்க வேண்டும் என்று இயக்குநர் வ.கௌதமன் வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, இயக்குநர் வ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து நம் மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அவர்களது துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக தாய்த்தமிழகத்து உறவுகளுக்கும் என் திரை குடும்பத்துக் கலைஞர்களான நடிகர் நடிகையர்களுக்கும் 2016 புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
 
மழை பற்றிய வரலாற்று குறிப்பின்படி கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையை விடவும் 2015 நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த மழையே பெருமழை என்றும் தமிழ் மண்ணில் நடந்த பேரிடர் மழை என்றும் நீரியல் வல்லுநர்களால் வர்ணிக்கப்படுகிறது.
 
மழைக்கொட்டி பெருக்கெடுத்த வெள்ளத்தால் குடிசையில் வசித்தோருக்கு வீடே பறிபோனது. வீட்டில் வசித்தோருக்கு வீட்டிலிருந்த ஒரு பொருளும் இல்லாமல் போனது. முதல்முறையாக நகரத்துக்கு வந்து பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வை தொடங்கிய பல்லாயிரக் கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர்.
 
கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள் நாசமானது. ஏறத்தாழ தொண்ணூறு ஆயிரம் கோடிகள் இழப்பு. ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது. நிதி பற்றாக்குறையால் மாநில அரசு திகைத்து நிற்கிறது. வழக்கம்போல் மத்திய அரசு பாராமுகமாக கிடக்கிறது.
 
பேரழிவு ஒன்று நடக்கும் போது இந்த உலகை காப்பதும் மீட்பதும் அதிகார வர்க்கங்களுக்கு முன் மனிதம் தான் என்பதை இந்த மண் மீண்டும் நிருபித்தது.
 
சாதி, மதம், இனம் பார்க்காமல் குடிநீரானாலும், உணவானாலும், உடைகள் மற்றும் மருந்தானாலும், வீதி வீதியாக ஊர் ஊராக உதவிகள் வந்து குவிந்தன. நம் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒட்டு மொத்த தமிழ் சமுகமும் மாபெரும் மனிதாபிமானத்தை பகிர்ந்து கொண்டது. யுத்தத்தால் சிதறடிக்கப்பட்டு உலகம் முழுக்க விழுந்த நம் தமிழீழ உறவுகள் கூட எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாங்களும் உதவுவோம் என நிதி சேகரித்து உதவிக்கொண்டிருக்கிறார்கள்.
 
மற்றவர்களுக்கு இணையாக நம் திரைத்துறையினரும் முடிந்தவரை நிதிகள் தந்து உதவினர். பிறமொழி கலைஞர்களும் முதலமைச்சர் நிவாரண நிதியாக பெருமளவு தந்தனர்.
 
சில கலைஞர்கள் தங்களது புகழையும், பொருளையும் பார்க்காமல் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நேரில் சென்று பணிவிடை செய்தனர். ஆனால் இன்னும் நம் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கவில்லை. ஒரு நிரந்தர தீர்வில்லை. நடந்து முடிந்த சிதைவுகளை வைத்தே கொண்டாட்டம் வேண்டாமென கிருஸ்துமஸ் நிகழ்வையே ரத்து செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
 
வருமானத்தை பிரதானமாக கருதும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு ஒட்டல்கள் சங்கம் தங்களது விடுதிகளில் நடக்கவிருந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிவிடை செய்யப்போகிறோம் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் ஒன்றுகூடி பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறார்கள்.
 
ஜன்னலை திறந்து தாய்மனதோடு பாருங்கள். ஒரு பெரும் கூட்டம் படுக்க பாய்கூட இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது. மாற்று உடுப்புக்கும்,மறுவேளை உணவுக்கும் வழியில்லாமல் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரிந்துக் கொண்டிருக்கையில், ஒரு வேளை அலைந்து திரியும் அந்த கூட்டத்தில் நாமோ அல்லது நம் குடும்பத்து உறுப்பினர்களோ நின்றிருந்தால் எப்படி இருக்கும் என ஒருமுறை கற்பனை செய்து பார்த்தாலே தாங்க முடியாமல் நெஞ்சம் வெடித்து விடும் என அதில் தெரிவித்துள்ளார்.