வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 24 ஜனவரி 2015 (11:32 IST)

நேதாஜி பற்றிய உண்மைகளை தெரிவிக்காவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் - வைகோ எச்சரிக்கை

நேதாஜி பற்றிய உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்காவிட்டால் அனைத்து மாநில மக்களையும் இணைத்து நாடாளுமன்றம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
மதிமுக சார்பில் பாளையங்கோட்டையில் இந்திய சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 119வது பிறந்த நாள் விழாவையொட்டி ஜவகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 

 
இக்கூட்டத்தின்போது பேசிய வைகோ, “நமது நாட்டின் சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உலகிலேயே சிறந்த தலைவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக பல முறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சுதந்திர போராட்ட காலத்தில் அவர் சென்னையில் மூன்று நாள் தங்கி கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் மேற்கு வங்காளத்திற்கு சென்ற அவரை பிரிட்டிஷ் அரசு வீட்டு காவலில் வைத்தது. அங்கிருந்து அவர் தப்பி ஜெர்மன் நாட்டுக்கு சென்று அதன் தலைவரான ஹிட்லரை சந்தித்தார். அவரை நேரில் சந்தித்து பேச பல தலைவர்கள் பயந்தனர்.
 

ஹிட்லருடன் சுபாஷ் சந்திர போஸ்..
 
ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடம்  நீங்கள் எழுதிய இந்தியன் கேம்ப் என்ற புத்தகத்தில் இந்தியர்களை பற்றி தவறாக எழுதியுள்ளீர்கள் அதனை நீக்க வேண்டும்  என்று துணிச்சலுடன் பேசினார்.
 
இந்திய தேசிய ராணுவ படைக்கு (ஐஎன்ஏ) தலைமை வகித்து ஜப்பான் படையுடன் சேர்ந்து பிரிட்டிஷ் ராணுவத்தை தாக்கினார். இதில் முதலில் அவர் வெற்றி பெற்றாலும், மழை மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாடுகள் போரில் இறங்கியதால் இந்திய தேசிய ராணுவ படைக்கு ஆதரவாக விளங்கிய ஜப்பான் பின்வாங்கியது. இதனால் போரில் தோற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

அப்படிப்பட்ட மகத் தான தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஜப்பானும், இந்தியாவும் அறிவித்தது. ஆனால் அவர் ரஷ்ய நாட்டின் சைபீரியாவிலுள்ள சிறையில் இருப்பதாக ரஷ்யா மற்றும் ஜெர்மன் உளவாளிகள் இந்திய தலைவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
 

 
நேரு உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் நேதாஜியின் இறப்பு தொடர்பான உண்மையான ஆவணங்களை இதுவரை வெளியிடவில்லை. மேலும் ஆவணங்கள் தீ விபத்தில் அழிந்து விட்டதாக கூறினர். தற்போது மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசும் அதே பல்லவியை பாடி வருகிறது.
 
உலகம் சுற்றும் வாலிபரான பிரதமர் நரேந்திரமோடி விரைவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான உண்மையான தகவல் மற்றும் ஆவணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
 
இல்லையென்றால் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள், கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், கட்சி தொண்டர்களுடன் இணைந்து விரைவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.