1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2015 (17:02 IST)

’நான் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை’ - விஜயகாந்த்

எல்லோரும் சேர்ந்து போராடினால் நானும் போராட தயார். தற்போது நான் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இன்று 2ஆவது நாளாக மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவர்களைச் சந்தித்தார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், ”மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு அணி எங்கள் கட்சியில் மட்டும்தான் உள்ளது. அதனால் அவர்களுக்கு பிரச்சினை என்றவுடன் பார்க்க வந்தேன். 
 
போலீஸ் உதவி கமிஷனர் மாற்றுத்திறனாளியை தாக்கியதாக புகார் கூறுகிறார்கள். அவர்களை அடிக்க கூடாது. அவர்களை அடிக்க என்ன உரிமை இருக்கிறது. இந்த போராட்டத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதால் தான் நான் வந்தேன்.
 
மதுவிலக்கு போராட்ட பிரச்சினையில் ஒன்று சேர்ந்து போராடினால் அந்த கட்சியுடன் கூட்டணி என்று கூறுகிறீர்கள். எல்லோரும் சேர்ந்து போராடினால் நானும் போராட தயார். தற்போது நான் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை” என்று கூறியுள்ளார்.