கடமையை முடித்து விட்டு கண் மூடுவேன் - நந்தினி கண்ணீர் பேட்டி


Murugan| Last Modified ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (13:31 IST)
தற்கொலை செய்து கொண்ட தன்னுடைய கணவரின் குடும்பத்தினரால் தானும், தனது குடும்பத்தினரும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக் நடிகை  ‘மைனா’ நந்தினி கூறியுள்ளார்.

 

 
விஜய் தொலைக்காட்சி தொடரில் வெளியான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களுடன் பிரபலமான நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.  
 
மேலும், தன்னுடைய தற்கொலைக்கு நந்தினியின் தந்தை ராஜேந்திரனின் டார்ச்சர்தான் காரணம். நந்தினியிடம் என்னை பேசவிடாமல் அவர் என்னை தடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என கார்த்திக் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 
 
எனவே, இது தொடர்பாக நந்தினி மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  அந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து விட்டார். 
 
எனவே, விரைவில் நந்தினியும், அவரது தந்தையும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் முன் ஜாமீன் மனு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இதுபற்றி பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த நந்தினி அளித்த பேட்டியில் கூறியதாவது: 
 
இந்த வழக்கில் முன் ஜாமீன் தேவையில்லை என நீதிபதி கூறிவிட்டார். எனவே, நான் மேல் முறையீடு செய்யப்போவதில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால், எங்கேயும் ஓடி ஒளியப் போவதில்லை. கடந்த 3 மாதங்களாக நானும் கார்த்தியும் பிரிந்து வாழ்ந்தோம். அப்போதெல்லாம் என்னைப் பற்றி தவறாக பேசாத என் கணவரின் குடும்பத்தினர், தற்போது என்னைப் பற்றி இழிவாக பேசி வருகிறார்கள். 
 
இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது கணவனை கூட பார்க்க அவர்கள் விடவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இடுகாட்டில்தான் அவரின் முகத்தைப் பார்த்தேன். 
 
எல்லோரிடமும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. மன உளைச்சலில் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். தற்போது நானும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கிறேன். நானும் தற்கொலை செய்து கொள்ளட்டுமா?. ஆனால், எனக்கு கடமைகள் இருக்கிறது. என்னை நம்பி எனது தாய், தந்தை, தம்பி இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு குழந்தை போன்றவர்கள். அவர்களை காப்பாற்ற நான் உயிர் வாழ வேண்டும். அவர்களை செட்டில் செய்து விட்டு நான் நிம்மதியாக கண் மூடுவேன்” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :