வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2015 (13:12 IST)

இளங்கோவன் பெண்களை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழிசை சவுந்திரராஜன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “கனமழை காரணமாக தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது.
 
ஆனால் தமிழக அரசு மறுசீரமைப்பு திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை. ஆங்காங்கே மின் வயர்கள் அறுந்து விழுந்து பலர் பலியாகி வருகிறார்கள். வட சென்னையில் பசுமாடும் இதற்கும் தப்பவில்லை.
 
மத்திய அரசிடம் தமிழக அரசு அதிக வெள்ள நிவாரணத்திற்காக அதிக நிதியை கேட்பதை வைத்து மக்கள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருக்கிறது என்று சொல்ல முடியாது.
 
தமிழக வெள்ள சேதத்திற்கு பிரதமர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார். வெள்ள நிவாரண நிதி தேர்தல் நிதியாக பயன்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எனக்கும் இருக்கிறது.
 
தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் இணைந்தனர். தற்போது அவர்கள் எங்கள் கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவிக்கவில்லை. அவரவர் தங்கள் கட்சி பணிகளை ஆற்றி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் எங்கள் நிலையை அறிவிப்போம்.
 
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பெண்களை பற்றி கேவலமாக விமர்சனம் செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. அவரது உட்கட்சி பிரச்சினை என்றாலும் அவர் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இதற்கு முன்பு முதலமைச்சர் குறித்தும், பிரதமர் குறித்தும் அவர் இதுபோலத்தான் பேசினார். எனவே அவர் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.