செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 2 மார்ச் 2015 (19:05 IST)

’வாடகைக்கு வீடு பிடித்து 3 மாதம் தங்கியிருந்தேன்’ - சகாயம் ஃபிளாஸ் பேக்

ஆட்சியர் பொறுப்பிலிருந்து தன்னை மாற்றியபோது வாடகைக்கு வீடு பிடித்து 3 மாதம் தங்கியிருந்தேன் என்று சகாயம் கூறியுள்ளார்.
 
சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றியபோது, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக நல்லிபாளையத்தில் நம்பிக்கை இல்லத்தை ஏற்படுத்தினார். இந்த இல்லத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
 

 
அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சகாயம், ”நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றியபோது, கபிலக்குறிச்சியை சேர்ந்த ஒரு சிறுவன், எனது தாயார் எங்களைவிட்டு வேறொருவருடன் சென்றுவிட்டார். அவரை எங்களோடு சேர்த்துவையுங்கள் என்று மனு அளித்தார்.
 
அந்த தாயிடம் பேசியபோது, அவர் மறுத்துவிட்டார். இப்பிரச்னையை முடிப்பதற்குள், அந்த சிறுவன் தனது  தந்தையுடன் இறந்துவிட்டான். இந்த சம்பவம் எனது மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தான் நம்பிக்கை இல்லத்தை தொடங்கினேன்.
 
2 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இந்த இல்லத்தில், தற்போது 20 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இந்த இல்லம் உணவளிக்கும் இடமாக மட்டும் இல்லாமல், பல்வேறு திறன்களை பயிற்றுவிக்கும் இல்லமாக மாறிவருகிறது.
 
நாமக்கல்லில் நான் தொடங்கிய உழவன் உணவகத்தை அதிகாரிகள் கெடுத்துவிட்டனர். அலுவலர்களுக்கு லாபம் கிடைக்காத எதையும் நடத்த விடமாட்டார்கள். இதை சொல்ல எனக்கு எந்த பயமும் இல்லை. லஞ்சத்தை எதிர்க்க இளைஞர்கள் தயாராக வேண்டும்.
 
காஞ்சிபுரத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது, பொதுமக்களின் உடல்நலத்துக்கு கேடுவிளைவிக்கும் தனியார் குளிர்பான நிறுவனத்தை இழுத்து மூட உத்தரவிட்டேன். தமிழனுக்கு அடையாளம் வேட்டி. இதை அணிய பலரும் வெட்கப்படுகின்றனர்.
 
கடந்த 2010ம் ஆண்டு நாமக்கல்லில் கலெக்டராக பணியாற்றிபோது, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி க்காக நான் டெல்லிக்கு அருகாமையில் உள்ள முசோரிக்கு அனுப்பப்பட்டேன். 58 நாள் பயிற்சிக்கு சென்ற நேரத்தில், 8வது நாளில் என்னை கலெக்டர் பொறுப்பில் இருந்து மாற்றினார்கள்.
 
பயிற்சி முடிந்து வந்து நாமக்கல்லில் வாடகைக்கு வீடு பிடித்து, 3 மாதம் தங்கியிருந்தேன். இது யாருக்கும் தெரியாது. ஒரு மாத காலம் வீட்டை விட்டு வெளியே கூட வரவில்லை” என்று கூறியுள்ளார்.