வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 28 ஜனவரி 2015 (15:08 IST)

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட கப்பல் படை அதிகாரி

கப்பல் படை அதிகாரி ஒருவர், ’காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
திருநெல்வேலியை அடுத்த பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை (29) என்பவர் மும்பையிலுள்ள இந்திய தேசிய கப்பல் படையில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
 
தங்கதுரை சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தங்கத்துரை தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள். விசாரணையில் தங்கத்துரை, காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
 
சோதனையின் போது, தங்கதுரை எழுதிய இரண்டு கடிதங்களை காவல் துறையினர் கைப்பற்றினர். அதில் ஒன்று தன்னுடைய தந்தைக்கும், மற்றொன்று பெருமாள்புரம் காவல் துறை அதிகாரிக்கும் எழுதப்பட்டுள்ளது.
 
தன்னுடைய தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  “நீங்கள் என்னை நல்லமுறையில் வளர்த்து படிக்க வைத்தீர்கள். என்னை வேலைக்கும் அனுப்பினீர்கள். நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணின் சாதி வழக்கப்படி அடுத்த சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ய முடியாது.
 
எனவே தற்போது என்னை அந்த பெண் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணும் நானும் காதலித்த போது பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளோம். ஒன்றாக இருந்தோம். அப்போது பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

அந்த நேரங்களில் எல்லாம் அந்த பெண் அற்புதமாக நடந்து கொண்டாள். இதனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை. நான் உயிருக்கு உயிராக காதலித்த அந்த பெண் எனக்கு கிடைக்காததால், நான் வாழ விரும்பவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று எழுதியுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
 

 
மேலும் காவல் துறை ஆய்வாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”நான் மராட்டிய பெண் ஒருவரை காதலித்தேன். அந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேறு சாதியைச் சேர்ந்தவருக்கு பெண்ணை காதல் திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்.
 
இதனால், நான் காதலித்தப் பெண்ணை திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நான் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் பெற்றோர் உள்பட யாரையும் இந்த தற்கொலை சம்பந்தமாக நீங்கள் அழைத்து விசாரணை நடத்தக்கூடாது” என்று எழுதியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.