வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 மார்ச் 2016 (18:27 IST)

அதிமுகவுக்கு மாற்று திமுக என நானும் ஏற்றுக்கொள்கிறேன் - வைகோ

அதிமுகவுக்கு மாற்று திமுக என கலைஞர் சொன்னதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், ஊழலில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகதானே இருந்து கொண்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 

 
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “"பெண்கள் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் என அனைவருமே குடிக்க பழகி தமிழகம் நாசமாகிக் கொண்டிருக்கிறது.
 
எனவே மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மதுவை முற்றிலுமாக ஒழிப்போம். அதிமுகவுக்கு மாற்று திமுக என கலைஞர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன்.
 
ஏனென்றால், ஊழலில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகதானே இருந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் கலைஞர் கருணாநிதியின் கூற்று சரிதான்.
 
ஓட்டுக்கு பணம் கொடுத்து நம்மை விலைக்கு வாங்க துடிக்கிறார்கள். பணத்தை யாரும் யாரிடமும் கொடுத்து விடாமல் இரவு பகலாக கண் விழித்து பார்த்துக்கொள்ளூங்கள். சாதி மதம் பாராமல் துன்பப்பட்ட பலரை காப்பாற்றி உதவி செய்துள்ளேன். அதில் ஒருவர் எனது உதவியாளராக உள்ளார்.
 
சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க வழக்குப் போட்டு நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளேன். காவிரியை காப்பாற்ற போராடியுள்ளேன். விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்க விடாமல் தடுத்துள்ளேன்.
 
இதுபோன்று மக்களுக்காக போராடிய காலங்களில் எல்லாம் மக்களிடம் வாக்குக் கேட்டதில்லை. இனி இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நரகுழியில் தள்ளப்பட்டுவிடுமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இப்போது உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.