1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2015 (12:53 IST)

மனைவி கருப்பாக இருப்பதாக சொல்வது துன்புறுத்தல் அல்ல: மதுரை உயர் நீதிமன்றம் கருத்து

‘மனைவியை பார்த்து கருப்பாக இருக்கிறாய் என்று கூறுவதை துன்புறுத்துவதாகக் கருத முடியாது’ என்று கூறி வாலிபர் ஒருவர் மீதான தண்டனையை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 36). இவருடைய மனைவி சுதா. கடந்த 12.9.2001 அன்று சுதா அந்த பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். சுதாவை பார்த்து கருப்பாக இருக்கிறாய் என்று பரமசிவம் கூறியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பரமசிவம் மீது கூடங்குளம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
 
அதே போன்று, தொழில் செய்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் வரதட்சணையாக கேட்டதாக கூறி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் பரமசிவம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட பரமசிவத்துக்கு தற்கொலைக்கு தூண்டியதாக கூறிய குற்றச்சாட்டின் கீழ் 7 ஆண்டும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் 3 ஆண்டும் ஜெயில் தண்டனை விதித்து 27.10.2006 அன்று உத்தரவிட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த தண்டனையை எதிர்த்து பரமசிவம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ‘மேல்முறையீடு’ செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜேக்கப் ஆஜராகி வாதாடினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
மனைவியை பார்த்து கருப்பாக இருக்கிறாய் என்று கூறியதை துன்புறுத்தியதாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டால், கணவர் தற்கொலைக்கு தூண்டியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
எனவே, மனுதாரர் தனது மனைவியை பார்த்து கருப்பாக இருக்கிறாய் என்று கூறியதால் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு அதன் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கி இருப்பது சரியல்ல. அதே போன்று, தொழில் தொடங்குவதற்காக பணம் கேட்பதை வரதட்சணை கேட்பதாக கருத முடியாது என்று இன்னொரு வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மனுதாரர் சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். காரை பழுது பார்ப்பதற்காகவே மனுதாரர் பணம் கேட்டுள்ளார். அதுவும், மனுதாரர் தான் ஏற்கனவே தனது மாமனாரிடம் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி வரும்படி கூறியுள்ளார். எனவே, மனுதாரர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக தண்டனை விதித்தது சரியல்ல. மனுதாரர் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ஜேக்கப் கூறினார்.
 
மேலும், தான் கூறிய விஷயங்கள் தொடர்பாக, உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவு நகல்களையும் நீதிபதியிடம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்தார். அந்த தீர்ப்பு விவரங்களை பார்த்த நீதிபதி தனது உத்தரவில் கூறி இருப்பதாவது:-
 
“மனைவியை பார்த்து கருப்பாக இருக்கிறாய் என்று கூறியதை துன்புறுத்தியாக எடுத்துக்கொண்டு மனுதாரர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்ட முடியாது என்று ஏற்கனவே மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று தொழில் செய்ய பணம் கேட்பதை வரதட்சணை கேட்பதாக கூற முடியாது என்று வேறொரு வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அடிப்படையில் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது.”
 
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.