வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (16:47 IST)

காதல் திருமணம் செய்த மாணவி கவுரவ கொலை: பெற்றோர் தலைமறைவு

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் காதல் திருமணம் செய்த இளம் கல்லூரி மாணவியை பெற்றோரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த பெற்றோர் மற்றும் உறவினர் தலைமறைவாகியுள்ளனர். போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
 
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டிணத்தை அடுத்த ஜமீன்தார்வலசை கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் குடும்பத்துடன் பார்த்திபனூரில் வசித்து வருகிறார். இவரது மகள் சங்கீதபிரியா (வயது 28). இவர் சேலம் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போது திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரை சேர்ந்த மாணவர் சுந்தரேசன் என்பவரை காதலித்தார். இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.
 
இதை அவர்கள் எதிர்த்தனர். இருந்தபோதும், பட்டப்படிப்பு முடிந்ததும், கடந்த 2011 ஆம் ஆண்டு சங்கீதபிரியாவை சொந்த ஊரான திருப்பாச்சூரில் வைத்து சுந்தரேசன் திருமணம் செய்து கொண்டார். அங்கேயே அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதுபற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது பெற்றோருக்கு தெரியவந்ததது.
 
இதனையடுத்து அவரது தந்தை வேலுச்சாமி, தாயார் ராணி, சகோதரர் ஆனந்தராஜ் ஆகியோர் திருப்பாச்சூருக்கு சென்றனர். அங்கு சங்கீதபிரியாவை சந்தித்த அவர்கள், சுந்தரேசனுக்கு முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி சங்கீதபிரியாவும் பெற்றோருடன் பார்த்திபனூருக்கு வந்தார்.
 
அதன்பின்பு அவரை கணவர் சுந்தரேசன் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

2 மாதங்களாக காத்திருந்தார். சந்தேகமடைந்த அவர், தனது மனைவியை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டதாக கடந்த நவம்பர் 23 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டிடம் புகார் செய்தார்.
 
இந்த புகாரை பரமக்குடி போலீசார் விசாரித்தனர். இதில் கடந்த 28.9.2013 அன்றிரவு பார்த்திபனூரில் வேலுச்சாமி வீட்டில் தங்கி இருந்த சங்கீதபிரியா திடீரென காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியுள்ளார். உடனே அருகில் இருந்த பஞ்சவர்ணம் என்பவருடைய வீட்டுக்குள் புகுந்ததும், அவரை பின்தொடர்ந்து வந்த தந்தை வேலுச்சாமி, ராணி, உறவினர் ஆனந்த ராஜ் ஆகியோர் மாணவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மறுநாள் அவர் இறந்துள்ளார்.
 
இதனை வைத்து போலீசார் சந்தேக மரணம் என்ற கோணத்தில் வழக்குபபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த இளம் பெண்ணின் பெற்றோர், சகோதரர் ஆகியோர் சங்கீதபிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. உடலை அவரது தாய்மாமன் முனியசாமி என்பவரின் உதவியுடன் அவருடைய காரில் ஏற்றி சொந்த ஊரான தேவிப்பட்டிணம் அருகே உள்ள ஜமீன்தார்வலசைக்கு கொண்டு சென்றனர்.
 
அங்குள்ள மயானத்தில் யாருக்கும் தெரியாமல் அவரது உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதே கிராமத்தை சேர்ந்த சமுதாய தலைவர் ராமலிங்கம், வெட்டியான் ராமு மற்றும் கார் டிரைவர் ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
 
இந்த கவுரவ கொலையை போலீசார் கண்டு பிடித்ததால் வேலுச்சாமி, ராணி, ஆனந்தராஜ் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று தலைமறைவாகிவிட்டனர்.
 
கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த தேவிப்பட்டிணம் போலீசார், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக பதிவு செய்து முனியசாமி, ராமலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார்.
 
ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களில் 3 கவுரவ கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.