ஓகேனக்கல் படகு விபத்து: பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு


K.N.Vadivel| Last Updated: திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (23:40 IST)
ஓகேனக்கல் படகு விபத்தில் 6 பேர் மரணத்திற்கு, பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
இது குறித்து, பாமக  நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஓகேனக்கல் நிகழ்ந்த படகு விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஓகேனக்கல் படகு விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகளும், அலட்சியமும் தான் காரணம் என்று கூறப்படுகிறது. படகுகளில் பயணம் செய்பவர்கள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகளை (LifeJacket) அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி கடைபிடிக்கப்பட்டிருந்தால் விபத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும்.
 
அதேபோல், ஒரு படகில் 5 பயணிகளும், படகு ஓட்டுனரும் மட்டுமே செல்ல வேண்டும். இந்த விதியும் மீறப்பட்டு ஒரே படகில் 10 பேர் பயணம் செய்திருக்கின்றனர். படகு சவாரிக்காக ஒருவருக்கு ரூ.110 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
 
ஆனால், அதைவிட கூடுதலாக ரூ.160 வசூலிப்பதுடன் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதையும் படகு ஓட்டுனர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
 
இத்தகைய விதிமீறல்களை மாவட்ட நிர்வாகம் தான் தடுத்திருக்க வேண்டும். ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு படகுகள் இயக்கப்படுவதையும் மாவட்ட நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். ஆனால், மாவட்ட நிர்வாகம் இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
ஓகேனக்கலில் ஐந்து அருவியை பார்ப்பதற்காக தொங்கும் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஐந்து அருவிக்கு மிகவும் நெருக்கமாக பயணிகள் செல்வதால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாலம் மூடப்பட்டது. இந்த பாலத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தி பயணிகளை அனுமதித்திருந்தால், அந்த அருவியை காண்பதற்காக ஆபத்தான படகுப் போக்குவரத்தை பயணிகள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். ஆனால், அலட்சியத்தின் உறைவிடமான மாவட்ட நிர்வாகம் இதையும் செய்யவில்லை.
 
இது தான் ஓகேனக்கலில் நடந்த கடைசி விபத்தாக இருக்க வேண்டும். இனியும் இத்தகைய விபத்துக்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வலுப்படுத்த வேண்டும். படகு விபத்தில் எவரேனும் சிக்கிக் கொண்டால் அவர்களை உடனடியாக மீட்பதற்கு வசதியாக அனைத்து கருவிகளுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் மேலும் படிக்கவும் :