செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (09:04 IST)

இந்து அமைப்புகளின் எதிர்மறை கருத்துக்களை பிரதமர் மறுத்து தெளிவுபடுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது - கருணாநிதி

இந்திய திருநாட்டை பிற்போக்கு திசைக்கு இழுத்துச்செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவு படுத்த வேண்டிய பிரதமர் நரேந்திரமோடி அமைதி காத்து வருவது அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கேள்வி:- இலங்கையில் தமிழர் ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?
 
பதில்:- இலங்கையில் பொறுப்பேற்றிருக்கும் சிறிசேனாவின் புதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தை சேர்ந்த 62 வயதான கே.ஸ்ரீபவன் என்பவரை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப்பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாகும். 1991 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார்.
 
தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப் பட்டிருக்கும் ஏராளமான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும். எனினும், இலங்கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கேள்வி:- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்களே?
 
பதில்:- தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அந்த இரு பெரும் இமயங்களின் அடியொற்றி லட்சோப லட்சம் செயல் வீரர்களும் பண்படுத்தி, வளர்த்து, பாதுகாத்து வரும் இந்த பூமியிலே தான், அதுவும் பெரியார் வாழ்ந்த திருச்சியிலேதான், இப்படி ஒரு குரல் கேட்டிருக்கிறது. திருச்சியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத்தின் மாநாட்டில், அதன் செயல் தலைவர் பிரவீன் தொக்காடியா பேசும்போது, “நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். ஒரே நாட்டில் இருவிதமான சட்டங்கள் இருக்கக்கூடாது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
இப்படிப்பட்ட குரல் எழுப்பப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற “இந்துத்துவா” அமைப்புகளைச் சேர்ந்த பலரும், ஏன், மத்திய மந்திரிகளில் ஒரு சிலரும் இப்படிப் பேசி வருவதை இந்தியா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே; காந்தியாரைப் போன்ற தேச பக்தர் கோட்சே; கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்க வேண்டும்; கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம்” போன்ற அடிப்படை வாதக் கருத்துகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.
 
பிரதமர் நரேந்திரமோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பகவத்கீதையைத்தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசிய புனித நூல் தகுதி வழங்கப்பட்டு விட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்புதான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்படவில்லை என்றும்; அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு விடும் என்றும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார்.
 
அதைப்போலவே, “முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்கள் இல்லை. அவசர நிலை காலத்திலேதான் இந்த இரு சொற்களும் சேர்க்கப்பட்டன. இந்த சொற்கள் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்” என்று சர்ச்சைக்குரிய கருத்தை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டிருக்கிறார்.
 
அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவதை நினைவூட்ட நாடு முழுவதும் மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை “ராம் மகோத்சவம்” நடத்தப்படும் என்றும்; கிராமங்கள் தோறும் இரண்டரை அடி உயரமுள்ள ராமர் சிலையை நிறுவி, பத்து நாட்கள் வழிபாடு நடத்தி அந்தந்த இடங்களிலேயே ராமர் சிலை நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.
 
இந்திய திருநாட்டை பிற்போக்கு திசைக்கு இழுத்துச்செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவு படுத்த வேண்டிய பிரதமர் நரேந்திரமோடி அமைதி காத்து வருவது, ஜனநாயகம்-மதச்சார்பின்மை-சமாதானம்-சமதர்மம்-யாரையும் விலக்கி வைக்காத அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சிப்பாதை ஆகிய முற்போக்கு லட்சியங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.