வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (16:13 IST)

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்குவதில் என்ன தவறு?? நீதிமன்றம் கேள்வி

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததால், அந்த ஹோட்டல் போலீஸாராலும் வருவாய் துறையினராலும் மூடப்பட்டது. ஹோட்டல் மூடப்பட்டதை எதிர்த்து ஹோட்டலின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ”இந்த ஹோட்டல் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவதால் மூடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்க கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்கையில் இதில் என்ன தவறு இருக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் எவ்வித குற்றமும் இல்லை எனும் போது, இருவரும் சேர்ந்து ஒரே அறையில் தங்குவதில் எவ்வாறு குற்றமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஹோட்டலை இரண்டு நாட்களுக்குள் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.