வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (21:06 IST)

”ஹாய் சாமி, நான் தமிழ்நாட்டுக்காரன்” - சுப்பிரமணிய சாமிக்கு கமல்ஹாசன் நெத்தியடி

சினிமாக்காரன் கமல்ஹாசன் என்று சுப்பிரமணிய சாமி கூறியதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ”போராட்டக்காரர்கள் மீது சமூகவிரோதிகள் என்ற முத்திரையைக் குத்த வேண்டாம். போராட்டக்காரர்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என்று” கூறியிருந்தார்.

இதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “போராட்டக்காரர்களை முதலமைச்சர் சந்தித்து இருக்க வேண்டும் என்று சினிமாக்காரன் கமல்ஹாசன் கூறியுள்ளது எவ்வளவு முட்டாள்தனமானது” என்று பதிவிட்டுள்ளார்.

சினிமாக்காரன் என்று கூறிய சுப்பிரமணிய சாமிக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாய் சாமி. நான் தமிழ்நாட்டுக்காரன். முதலமைச்சர் அவர்களுடைய மக்களை சந்தித்தே ஆக வேண்டும். அரசியல்வாதிகள் உட்பட. காந்தியும், சீசரும் மக்களின் முன் பணிந்தே இருந்தனர். முதல்வர் ஏன் சந்திக்க கூடாது?” என்று கூறியுள்ளார்.