வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஈரோடு வேலுச்சாமி
Last Updated : வெள்ளி, 24 அக்டோபர் 2014 (13:39 IST)

ஈரோடு மாவட்டத்தைப் புரட்டிப் போட்டது மழை - படங்கள்

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தியூரில் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாகப் பருவ மழை சரியாகப் பெய்யவில்லை. இதனால் விவசாயத்தை நம்பியுள்ள இந்த மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. விவசாய கிணறுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பண்ணைத் தொழில் கடுமையாக பாதித்தது. இதனால் இந்தத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான கூலியாட்களும் பாதிக்கப்பட்டனர்.

மேலும்
 

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வங்கக் கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு நகரில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள பாலத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர் உள்ளிட்ட பகுதியில் தாழ்வாக உள்ள இடங்களில் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. கடம்பூர் வனப்பகுதி குன்றியில் பெய்த கனமழையின் காரணமாகக் குண்டேரிபள்ளம் நிறைந்ததால் உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாக்கம்பாளையம் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உருகியம் உள்ளிட்ட மூன்று மலை கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


 
திம்பம் மலைப் பகுதியான கோட்டாடை, குழியாடை, மாவள்ளம், தேவர்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையினால் திம்பத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் ரோட்டில் உள்ள அரேபாளையம் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும்
 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மீனவ மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் முருகன், குமாரி தம்பதியினரின் மகன் மணிகண்டன்(14), அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், சுமதி தம்பதியின் மகன் ரிஷிகேசவன்(11) அதே பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். இருவரும் ரிஷிகேசவன் மணிகண்டனின் சித்தப்பா மகன் ஆவார். இவர்கள் கனமழையால் நிரம்பியுள்ள குளத்திற்குத் தங்கள் நண்பர்களுடன் குளிக்கச் சென்றனர். அப்போது மணிகண்டன், ரிஷிகேசவன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக இறந்தனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை வேதனை அடையச் செய்துள்ளது. 




 
நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிகபட்சமாக 56 மி.மீ, ஈரோட்டில் 22 மி.மீ., கோபிசெட்டிபாளையத்தில் 17 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவு கடம்பூர் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து வன ஓடைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீராய்க் காட்சியளிக்கிறது.