வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (20:33 IST)

தொடர்மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: 8 நாளில் 15 அடி உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 8 நாளில் 15 அடி தண்ணீர் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


 

 
ஈரோடு மாவட்டத்தின் முக்கியஅணையாக திகழ்வது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்ட பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடியாகும். இதில் சகதி 15 அடி கழித்து நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளவு 32 டி.எம்.சி., ஆகும்.
 
ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியை பசுமையாக வைத்துள்ள பவானிசாகர் அணை புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி உள்ளிட்ட நகராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதிகளின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வருகிறது. இது மட்டுமின்றி அணையின் இருந்து வெளிவரும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளியங்காரயன் பாசனப்பகுதியை சேர்ந்த ஐம்பதாயிரம் ஏக்கர் பாசனப்பகுதியும் வளம் பெறுகிறது.
 
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடாலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வள ஆதாரங்களாக விளங்குகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு சொற்ப அளவு தண்ணீரே வந்தது. அதே சமயம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒவ்வொறு நாளும் குறைய தொடங்கியது.
 
அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் குடிநீர் பிரச்சனை வந்துவிடுமோ என்று பொதுமக்கள் அஞ்சிகொண்டிருந்த நிலையில் நேற்று மதியம் முதல் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மலைப்பகுதியான குன்னுõர், கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.
 
கடந்த 14 ஆம் தேதி காலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1550 கனஅடி தண்ணீர் வந்தது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயந்தது. இன்று மதியம் அணையின் நீர்மட்டம் 63 அடியை தொட்டது. அணைக்கு வினாடிக்கு11500 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 1450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப்பகுதிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடியும், காளிங்கராயன் பாசனப்பகுதிக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீரும் பிரித்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.