வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (13:11 IST)

பெற்றோரை பார்க்க சென்ற மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்

விடுதியில் தாங்கியிருந்த மாணவன் அனுமதியின்றி பெற்றோரை சந்திக்க சென்றதால், அவனை தலைமை ஆசிரியர் மற்றும் வார்டன் ஆகியோர் அடித்துக் கொலை செய்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ரதன்பூர் பகுதியில் வசிப்பவவர் ஜீல்ஹஸ் மாலிக். அவரது மகன் ஷாமீன் மாலிக்(12). ஷாமீன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான். மேலும் அவன் பள்ளி விடுதியில் தங்கியிருந்தான்.
 
கடந்த 8ஆம் தேதி விடுதியில் இருந்தபோது அவனை சந்திக்க அவனது பெற்றோர்கள் வந்துள்ளனர். அவர்கள் விடுதிக்கு வெளியே நின்றுள்ளனர். அவர்களை சந்திக்கும் ஆர்வத்தில் சிறுவன் யாரிடம் சொல்லாமல் விடுதிக்கு வெளியே போய் அவர்களை சந்தித்து பேசி விட்டு அதன் பின் விடுதிக்கு வந்தான்.
 
இதனால் கோபமடைந்த விடுதி வார்டன் லிட்டன்ஷேக் மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹஷிப்சேக் ஆகியோர், எங்களிடம் அனுமதி வாங்காமல் எப்படி விடுதிக்கு வெளியே செல்லலாம் என்று கூறி அவனை அடித்து துவைத்துள்ளனர்.
 
இதனால் மாணவன் அங்கேயே மயங்கி விழுந்தான். உடனே அவர்கள் மாணவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவனின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகனுக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.
 
ஆனால் அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அவனின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்த பிறகுதான்,  தங்கள் மகனை அவர்கள் அடித்தே கொன்றுள்ளார்கள் என்பது தெரிந்தது.
 
இதனையடுத்து அவர்கள், அந்த தலைமை ஆசிரியர் மற்றும் வார்டன் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தலைமை ஆசிரியரின் இந்த செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.