வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 2 ஜூலை 2015 (19:37 IST)

பர்தா குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு

இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவை பற்றி அவதுறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
 
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், ''இரு பிரிவினரிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, மத துவேச கருத்துக்களை கூறி பொது அமைதிக்கும், சமூக நல்லினக்கத்திற்கும் குந்தகம் விளைவித்து வரும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த 26 ஆம் தேதி மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம், 'இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிகளுக்கு பர்தா அணிந்து செல்லக் கூடாது. பர்தா அணிந்து செல்வது காப்பி அடிப்பதற்கு உதவும்' என்று கூறியுள்ளார்.
 
பர்தா என்பது இஸ்லாமிய மார்க்கம் வழங்கிய உரிமையாகும். அதை கேவலமாக விமர்சித்து உள்நோக்கத்தோடு பேசியுள்ளார். இது சிறுபான்மை மக்களின் மீது மற்றவர்களுக்கு தவறான எண்ணத்தை  ஏற்படுத்தும்.
 
ஹெச்.ராஜா, இதற்கு முன் தமிழகத்தில் மக்கள் எப்போதும் போற்றக்கூடிய ஈ.வே.ரா.பெரியார் உட்பட பல மதிப்புமிக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அதற்காக அவர் மீது போடப்பட்ட பல வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான், இவரது அவதூறு பேச்சுகளை தடுக்க முடியும். இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்துக்கு எதிராக பேசிவரும் இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம்’’ என்றார்.