செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (12:24 IST)

எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது - கை விரித்த ஆளுநர்

தற்போதுள்ள சூழ்நிலையில் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கை விரித்து விட்டது தெரிய வந்துள்ளது.


 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுரிடம் மனு கொடுத்தனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சட்டமன்றத்தை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட பல கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில், தொல். திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட சிலர் இன்று காலை ஆளுநரை சந்தித்து அதே கோரிக்கையை முன் வைத்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசியதாவது:


 

 
தற்போதுள்ள சூழலில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு பதிலளித்த அவர் “தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதன் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், இப்போதும் அவர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களாகவே இருக்கிறார்கள். அவர்களை அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கினாலோ, அல்லது அவர்கள் அனைவரும் வேறு கட்சிக்கு சென்றுவிட்டால் மட்டுமே சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.
 
எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பலம் குறைந்து விட்டதாக கருத முடியாது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தற்போது அவசியம் இல்லை. மேலும், ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இரு குழுக்களாக பிரிந்து செயல்படும்போது அதில் நாங்கள் தலையிட முடியாது” என ஆளுநர் கூறினார் என திருமாவளவன் கூறினார். 
 
அதன் பின் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வழியாக பேட்டியளித்த அவர் “தற்போதைய சூழலில் முதல்வரை அழைத்து பேரவை கூட்ட ஆளுநர் உத்தரவிட வாய்ப்பில்லை. தற்போது நடைபெறும்  அரசை கலைக்க பாஜக விரும்பவில்லை என்பதையே ஆளுநரின் தயக்கம் உணர்த்துகிறது” எனக் கூறினார்.