வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (11:09 IST)

ஈஷா மையத்திற்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு? - வாசுகி பகீர் குற்றச்சாட்டு

ஈஷா மையத்திற்கு ஒத்துழைப்பு அளித்துவருவதாக சந்தேகம் எழுவதாகவும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
கோவையில் மாதர் சங்கத்தின் சார்பில் புதனன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் உ.வாசுகி பங்கேற்று பேசினார்.
 
ஈஷா யோகா மையத்தின் முறைகேடுகள் குறித்து அவர் பேசுகையில், கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகாமையத்தின் மீது கட்டிட விதிமுறை மீறல், யானைகளின் வழித்தடங்கள் மறிப்பு, விதி மீறிய கட்டிடங்களுக்கு தடையில்லா மின்சாரம், கல்வி கட்டணத்தில் முறைகேடு, இளைஞர்களை மூளைசலவை செய்வது என அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
 
இந்நிலையில், தன்னுடைய மகள்களை மீட்டுத் தரக்கோரிய பேராசிரியர் காமராஜின் புகாரின் மீது உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
 
"ஏற்கனவே அந்த பெண்கள் நாங்கள் சுய விருப்பத்துடனே இம்மையத்தில் இருக்கிறோம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்திருந்தனர்; அதை வைத்தே தீர்ப்பை சொல்லியிருக்க முடியும்.
 
ஆனால் ஆசிரம ஆட்கள் வளையம் போல் சுற்றி இருக்க, உண்மை மனநிலையைச் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் வேறு இடத்தில் தங்கவைத்து விசாரிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை. ஆனால் ஈஷா வளாகத்திற்குள்ளேயே விசாரணை நடத்தியதால், உண்மைகள் மறைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது’’ என வாசுகி தெரிவித்தார்.
 
இதுகுறித்து தமிழக அரசு மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய வாசுகி, இதுகுறித்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் சட்டமன்றத்தில் விவாதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
 
‘‘தொடர்ச்சியாக ஈஷா யோகாமையத்தின் மீதான புகார்கள் வெளிவந்து கொண்டிருப்பதும், இந்த புகாரின் தொடர்ச்சியாக அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. ஈஷா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பல கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதால் 2013 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புத் துறை இவற்றை இடிக்க உத்தரவிட்டும் அவை இன்னும் இடிக்கப்படாதது ஏன்’’ என்றும் கேள்வி எழுப்பினார்.
 
இந்த விசயத்தில் அரசு அதிகாரிகள் ஈஷா மையத்திற்கு ஒத்துழைப்பு அளித்துவருவதாக சந்தேகம் எழுவதாகவும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
 
ஈஷா மையம் மீதான பிரச்சனையில் தமிழக அரசு பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, மனநல மருத்துவர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், கல்வியாளர், குழந்தைகள் நலஉரிமை ஆணையத்தின் உறுப்பினர், சூழலியல் செயல்பாட்டாளர், பெண்கள் நல அமைப்பினர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரித்து முழு உண்மையை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.