1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (05:34 IST)

உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது தேர்தல் நாடகம்: மு.க.ஸ்டாலின் வர்ணனை

உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது தேர்தலை மனதில் வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு நாடகம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வர்ணித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த 2014 அக்டோபர் மாதத்தில் “உலக முதலீட்டாளர் மாநாடு” நடத்தி 76 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கப் போகிறோம் என்று தடபுடலாக அறிவிப்பினை வெளியிட்டது அதிமுக அரசு.
 
வேலை இல்லாத் திண்டாட்டமும், முதலீடு செய்ய வந்தவர்கள் மின்சாரம், தரமான சாலைப் போக்குவரத்து, தண்ணீர் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக இல்லாத நிலையில், திரும்பி ஓடுவதுமாக இருக்கும் மாநிலப் பொருளாதாரத்தை சமாளிக்கத் தேவையான முதலீடுகளைப் பெற இந்த உலக முதலீட்டாளர் மாநாடு உருப்படியாக நடைபெற்றிருந்தால் உதவிகரமாக இருந்திருக்கும்.
 
ஆனால் மாநாடு என்று ஆரவாரமாக அறிவித்தார்களே தவிர அதன் பிறகு அந்த மாநாட்டை நடத்தும் பணிகளில் எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை. அதிமுகவிற்குள் ஏற்பட்ட குழப்பத்தால் அந்த மாநாடு அக்டோபர் 2014, மார்ச் 2015, செப்டம்பர் 2015 என்று மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டது. அப்படி தள்ளி வைக்கப்பட்ட மாநாடு இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடைபெறுகிறது.
 
மாநாடு நடத்துவதற்கு இதை விட மோசமான நேரம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் இன்றைக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா ஆகிய அனைத்து நாடுகளிலும் பொருளாதார ரீதியாக பெரும் குழப்பம் நிலவுகிறது.
 
லண்டன் ஸ்டாக் எக்சேஞ்சின் FTSE Index 100 இந்த வருடத்திலேயே குறைந்த மதிப்புக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதிகப்படியான வேலை இல்லா திண்டாட்டமும், கச்சா எண்ணை விலை குறைவும் கனடாவின் பொருளாதாரத்தை பெரும் நெருக்கடியில் கொண்டு போய் விட்டிருக்கிறது.
 
சீனாப் பெருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள குழப்பங்கள் நம் நாட்டில் சென்செக்ஸ் புள்ளிகள் வரலாறு காணாத வகையில் சரிந்து விட காரணமாக அமைந்திருக்கிறது.
 
இப்படியொரு சூழ்நிலையில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு”நடத்தி, அந்த மாநாட்டிற்கு முக்கிய ஐ.டி. கம்பெனிகளை அழைத்து வர மாநில அரசு அதிகாரிகள் முயற்சி செய்தாலும், எந்தக் கம்பெனியும் மாநாட்டிற்கு வருவதாகவோ அல்லது புதிய முதலீட்டு ஒப்பந்தங்களைப் போடுவதற்கு தயாராக இருப்பதாகவோ ஆர்வம் காட்டவில்லை.
 
ஆகவே, உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது தேர்தலை மனதில் வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு நாடகம். முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற போர்வையில் “செயல்படும் அரசு” இருப்பது போல் காட்டிக் கொள்ளுவதற்கான விளம்பர யுக்திதான் இந்த மாநாடு.
 
அதிமுக ஆட்சியில் இதுவரை பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்தாலும், அந்த ஒப்பந்தங்களின்படி உண்மையிலேயே பெற்ற புதிய முதலீடுகள் எவ்வளவு? உருவாக்கப்பட்ட புதிய கம்பெனிகள் எத்தனை? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
 
ஆகவே இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்பது பற்றி விரிவான வெள்ளை அறிக்கை ஒன்றை அதிமுக அரசு வெளியிட வேண்டும். விளம்பர மோகத்தைத் தவிர்த்து, உண்மையிலேயே மாநிலத்திற்கு புதிய முதலீடுகளைப் பெறவும், வேலை வாய்ப்பை பெருக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.