வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 26 நவம்பர் 2014 (14:07 IST)

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்: ஜி.கே.வாசன் பேட்டி

புதிய கட்சிக்கான கொடியை சென்னையில் இன்று அறிமுகம் செய்து வைத்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் பாரதீய ஜனதா கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.
 
ஜி.கே.வாசன் புதிய கட்சிக்கான கொடியை சென்னையில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். நேர்மை, எளிமை, துய்மைக்கு எடுத்துக்காட்டாக புதிய கட்சி செயல்படும் என்று கூறினார்.
 
அப்போது செய்தியாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜி.கே. வாசன் அளித்த பதில்கள் வருமாறு:–
 
கேள்வி: திருச்சி மாநாட்டில் உங்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் பற்றிய விபரம் அறிவிக்கப்படுமா?
 
பதில்: திருச்சியில் புதிய கட்சி தொடக்க விழா மாநாடு முடிந்த பிறகு, எங்கள் கட்சியின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறும்.
 
அந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் ஏற்கத்தக்க வகையில் புதிய நிர்வாகிகள் தேர்வு அமையும்.
 
கேள்வி: உங்கள் புதிய கட்சியின் இலக்கு எதை நோக்கி இருக்கும்?
 
பதில்: தமிழ் நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி அமைப்பதே எங்களது லட்சியம் ஆகும். எங்களது இந்த லட்சியத்தில் நாங்கள் மிகவும் தெளிவான சிந்தனையுடனும், வெளிப்படையாகவும் உள்ளோம்.
 
விமர்சனம் செய்பவர்கள் பற்றி நாங்கள் கவலைப் படுவதில்லை. தூற்றுவோர், தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும். எங்கள் பணி, மக்கள் பணி செய்வதே.
 
கேள்வி: தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா?
 
பதில்: பாரதீய ஜனதா கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். அவர்களது கொள்கை, லட்சியம் வேறு. எங்களது அரசியல் பாதை வேறு.
 
கேள்வி: அப்படியானால் திமுக, அதிமுக வுடன் கூட்டணி வைப்பீர்களா?
 
பதில்: தேர்தல் வரும் போது இது பற்றி பார்க்கலாம். எங்களது புதிய கட்சி இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் பட்டி, தொட்டியெல்லாம் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டியதுள்ளது. எனவே தேர்தல் கூட்டணி பற்றி பிறகுதான் முடிவு செய்யப்படும். இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.