வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 14 மார்ச் 2016 (15:35 IST)

காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த பெண்ணின் தந்தை சரண்

காதல் திருமணம் செய்த வாலிபர் சங்கரை கொலை செய்த பெண்ணின் தந்தை சின்னசாமி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
 

 
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
 
இதனையடுத்து, சங்கர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் 3 பேர் கொண்ட கும்பலால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 
இந்த தாக்குதலில், படுகாயமடைந்த அவரது மனைவி கவுசல்யா வெட்டுக்காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த படுகொலை சம்பவம் அருகிலிருந்த கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், கொலையாளிகளின் முகத்தை சிலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்துள்ளனர். கொலையாளிகள் மீது தலித் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், வாலிபர் கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை சின்னசாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

முன்னதாக சங்கரின் மனைவி நாளிதழ் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், “எனது கணவரை பிரிந்து வரும்படி என்னை உறவினர்கள் நிர்ப்பந்தித்து வந்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு என் தந்தையும், தாயும் என்னை தேடி வீட்டுக்கு வந்தனர். அவர்கள் என் கணவர் சங்கரை பிரிந்து தங்களுடன் வந்துவிடுமாறு கூறினர்.
 
நான் ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது. உங்கள் வீட்டுக்கு வந்தால் என் கணவருடன் தான் வருவேன். இல்லையெனில் வரமாட்டேன்’ என்று கூறிவிட்டேன்.
 
அதற்கு என் பெற்றோர் உன் கணவர் சங்கரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளோம். நீ எங்களுடன் வந்து விட்டால் அவனது உயிரை பறிக்க மாட்டோம். இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
 
எனது கணவருக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்த நாள் வருகிறது. நேற்று பணம் கிடைத்ததால் நான் என் கணவரின் பிறந்த நாளுக்காக ஜவுளி வாங்குவதற்காக அவருடன் உடுமலை சென்றேன். அங்கு அவருக்கு தேவையான துணிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்ப பஸ் நிலையத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தோம்.
 
அப்போது என்னையும், எனது கணவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. மீண்டும் அவர்களை பார்த்தால் அடையாளம் காட்டுவேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.