வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2015 (21:21 IST)

சிறுமி பாலியல் பலாத்கார விவகாரம் : முதலமைச்சர் என்ன செய்திருக்கிறார்? - சிபிஎம் கேள்வி

17 வயது சிறுமி தன் தந்தை, சகோதரன், தாத்தா உள்ளிட்ட பலரால் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ன செய்திருக்கிறார்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
 

 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன், கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
இன்றையக் கூட்டத்தில் சிவகங்கை சிறுமி வல்லுறவு வழக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதில், ”சிவகங்கையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தன் தந்தை, சகோதரன், தாத்தா உள்ளிட்ட பலரால் வெவ்வேறு காலத்தில், குழந்தைப் பருவத்திலிருந்தே தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவு செய்யப் பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி  அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினர் சிலரும் அடக்கம் என்று தெரிகிறது. இதுவரை 26 பேர் குற்றவாளிகளாகப் பட்டியல் இடப்பட்டிருக்கிறார்கள், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
3 மாதங்களுக்கு முன்பே, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டாலும், முதல் தகவல் அறிக்கையில் முறையான பிரிவுகளில் வழக்கு பதியப்படவில்லை என்றும். கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் இணைக்கப் படவில்லை என்றும் சிறுமியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
 
கடத்தல், பாலியல் வல்லுறவு, கும்பல் பாலியல் வல்லுறவு, மிரட்டல், போதை பொருட்களுக்குப் பழக்கப் படுத்துதல் உள்ளிட்ட குற்றங்கள் நடந்துள்ளன என்பதும், உயர் மட்ட அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலர் குற்றம் இழைத்த பட்டியலில் வருவதும் வழக்கின் தீவிரத்தை உணர்த்துகிறது.
 
ஒரு பகுதி காவல்துறையினர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. தடுப்பதற்கு, காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ன செய்திருக்கிறார்?
 
ஒட்டு மொத்த சமூகமே கவலைப்பட வேண்டிய இத்தகைய பிரச்னைகள் குறித்துக் கலந்து பேச, சர்வ கட்சி கூட்டத்தையோ, சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வையோ, பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கூட்டத்தையோ கூட்டும் பொறுப்பு தமிழக அரசுக்கு இல்லையா?
 
நடந்தவை, நடப்பவை அனைத்தும் நல்லதாகவே உள்ளன என்பது தான் அரசின் கொள்கையாகத் தெரிகிறது. சிறுமிக்கு நடந்த இக்கொடுஞ்செயல்களையும், தமிழக அரசின் அலட்சியமான அணுகுமுறையையும், காவல்துறையின்  மெத்தனப் போக்கு மற்றும் குற்றத்தில் பங்களிப்பு உள்ளிட்டவற்றையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
 
மேலும், இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் முறையாக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது, குற்றத்துக்குத் துணை போனதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வற்புறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.