சசிகலா கண்ணில் நேர்மையில்லை; அதிமுக உடையும் : ஜெ.வின் தோழி அதிரடி


Murugan| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:08 IST)
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு ஜெயலலிதா மீது உண்மையான பாசம் எதுவும் இல்லை எனவும், அவரால் அதிமுக கட்சியில் பிளவு ஏற்படும் எனவும் ஜெ.வின் நெருங்கிய தோழியான கீதா கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
ஒரு பிரபல செய்திதாளுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
ஜெயலலிதா நல்லவர் அல்லது கெட்டவர் என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர் ஒரு தனி மனுஷி. சசிகலா குடும்பத்தினருக்கு மொத்தமாக ஒன்று சேர்ந்து ஏதோ செய்துள்ளார்கள். பாவம் ஜெ.வால் அதை தடுக்கமுடியவில்லை. நானும் ஒரு உளவியலாளர்தான். சசிகலா கண்ணில் நேர்மையில்லை. ஜெ. மறைந்த போது சசிகலா கண்ணில் இருந்து கண்ணீர் கூட வரவில்லை. சோகமாக இருப்பது போல் நாடகம் காட்டினார். ஆனால் மோடி வந்ததும் அழுகை வந்துவிட்டது. பதவிக்காகவும், பணத்திற்காகவும் சிலர் அவரை ஆதரிக்கலாம். ஆனால்,மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. 
 
1987ம் ஆண்டு முன்பு இதே தம்பி துரை, ஜெயலலிதாவை எப்படி இகழ்வாக பேசினார் என்பது எனக்கு தெரியும். தற்போது சசிகலாவிற்கு துதி பாடிக் கொண்டிருக்கிறார்.  பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிட மற்றவர்களை அனுமதித்து, அதில் சசிகலாவும் போட்டியிருக்க வேண்டும். அவரை கட்சியில் இருந்து ஜெ. நீக்கி இன்னும் 5 வருடங்கள் முடியவில்லை. அதற்குள் அவர் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சட்டவிதிகளையே இவர்கள் மீறியுள்ளனர். இவர்கள் கட்சியின் துரோகிகள்.
 
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அதிரடி இறங்க வேண்டும். ஆனால் அவர் பொறுமையாக இருப்பது அரசியலுக்கு சரிவராது. அதேபோல் தீபாவின் அண்ணன் தீபக்கும் விலை போய்விட்டார். அது அவரின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். 
 
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என 3 ஆயிரம் மட்டுமே சசிகலாவை ஆதரிக்கின்றனர். ஆனால், அதிமுக தொண்டர்கள் ஒன்றரை கோடி பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை.


 

 
ஜெ. மறைந்து ஒரு மாதம் கூட முடியவில்லை. அதற்குள் அனைத்து பதவிகளிலும் உட்கார வேண்டும் என சசிகலா பேராசைப்படுகிறார். ஜெ.வின் காரில் முன்னால் அமர்ந்து செல்கிறார். இதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் ஓட்டுக்காக செல்லும் போது இது தெரியும்.
 
சசிகலா எனும் தீயசக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவரால் அதிமுக உடையும். அவருக்கு எதிராக போராடுவோம். அதில் கண்டிப்பாக வெற்றியும் பெறுவோம். நான் போயாஸ்கார்டன் சென்றால் சசிகலாவை வெளியே அனுப்பி விடுவேன் என நடராஜன் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரிடம் கூறியதை என் காது பட கேட்டேன். இவர்கள் செய்த பாவம் அவர்களை சும்மா விடாது” எனக் கூறினார். 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :