வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (16:36 IST)

பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி விரைவில் போராட்டம்: தமாகா பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமாகா பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
தமாகா பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
 
தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கண்ணியமான அரசியலை நாடும் தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிட ஜி.கே.வாசனுக்கு துணை நிற்போம்.
 
கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்பட நிர்வாகிகளை நியமனம் செய்ய ஜி.கே.வாசனுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
 
மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய அப்பழுக்கற்ற தலைவர் ஜி.கே.வாசனுக்கு பேராதரவு தர தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறோம்.
 
மத்திய பாஜக அரசின் அமைச்சர்கள் மற்றும் சில தலைவர்களின் பேச்சுக்கள் சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்தள்ளது. இவ்வாறு துவேச அரசியலை முன்னெடுப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தமிழக அரசு நலிந்து வரும் தொழில்களை பாதுகாக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும் மின்வெட்டு இல்லாமல் தொடர் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அகில இந்திய அளவில் லோக்பால் நீதிமன்றத்தையும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தையும் அமைக்க வேண்டும்.
 
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
 
பெண்கள், இளைஞர்கள் நலன் கருதி பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துகிறோம். அடுத்த மாதம் 31 ஆம் தேதிக்குள் அரசு இதுகுறித்து முடிவெடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்.
 
மத்திய-மாநில அரசுகள் 100 நாள் வேலை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
வேலை கிடைக்காத மாணவ-மாணவிகள் பெற்ற கல்விக் கடனை அரசு ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் படிப்பை தொடர கல்வி உதவித்தொகை வழங்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
விவசாயம் நலிந்துள்ளதால் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம், கொப்பரை தேங்காய் கிலோ ரூ.96 என்று அரசு விலை நிர்ணயிக்க வேண்டும்.
 
செம்மர கடத்தலில் ஈடுபடும் மாபியா கும்பலையும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளையும் ஆந்திர அரசு கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். 20 தமிழக தொழிலாளர்களை சட்ட விரோதமாக சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், அரசு துறைகளில் பணி வாய்ப்பும் வழங்க வேண்டும்.
 
தமிழகத்தில் மழை நீரை சேமிக்க நதிகளின் குறுக்கே தடுப்பாணைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கல்வித்துறை, வியாபாரத் துறையாக மாறிப்போய் உள்ளது. கல்வியின் பெயரில் நடைபெறும் கட்டண கொள்ளைகளை மத்திய–மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
 
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
 
விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
 
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
 
இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற்றிட, தமிழர் குடியிருப்பு பகுதியில் உள்ள ராணுவம் வெளியேற மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
நெசவாளர்கள் நலன் காக்க விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமும் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு சேர வேண்டிய மாநில நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.
 
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் மற்றும் விதவை உதவித் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.