வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2014 (18:57 IST)

ஜி.கே.வாசன் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவித்தார்

திருச்சியில் வெள்ளிக்கிழமை (28.11.2014) மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்று அறிவித்தார் ஜி.கே. வாசன்.
 
பல ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த மூப்பனாரால் உருவாக்கப்பட்டது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இது மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியோடு இணைந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்ற பெயர் மறைந்து போனது.
 
தற்போது, அதே பெயரை மூப்பனாரின் மகன் ஜி.கே. வாசன் தனது புதிய கட்சிக்கு சூட்டியுள்ளார்.
 
மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன், தான் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை திருச்சியில் இன்று (28.11.2014) மாலை நடைபெற்ற தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். கூட்டத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் வந்திருந்தனர்.
 
மேடையின் வலதுபுறத்தில் வளமான தமிழகம் என்ற வாசகத்துடன் புனித ஜார்ஜ் கோட்டை படமும், இடதுபுறத்தில் வலிமையான இந்தியா என்ற வாசகத்துடன் செங்கோட்டை படமும் வைக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பு, நாடாளுமன்ற வடிவத்தைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பெய்தாலும் மேடைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 
பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வண்ண விளக்குகளைக் கொண்ட தோரணங்களும் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கின்றன.
 
கூட்ட அரங்கின் கடைசிப் பகுதியில் அமர்ந்திருப்பவரும் பொதுக்கூட்ட நிகழ்வை தெளிவாகப் பார்க்கும் வகையில், ஆங்காங்கே பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.